Show all

கொள்ளைத் தொழிலை நிறுவனமாக நடத்துவதற்கு சாத்தியப் பட்டிருக்கிறது! அண்மையில் லலிதாவில், இருமாநிலங்களில் 160 இடங்களில்

திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் மீது, கர்நாடகாவில் சுமார் 100 இடங்களில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.  விசாரணையில் சென்னையில் 60 இடங்களில் கொள்ளை அடித்துள்ளதாக முருகன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் வேறு ஒரு வழக்கில் பெங்களூரு அறங்கூற்றுமன்றத்தில் சரணடைந்தான். அவனை பெங்களூரு காவல்துறையினர் இரண்டாவது முறையாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொம்மனாகலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அவனை 7 நாள் காவலில் எடுத்து பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில், சென்னையில் 60 இடங்களில் கொள்ளையடித்ததாக திருவாரூர் முருகன் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த இடங்கள் என்ற விவரத்தையும் அவன் பெங்களூரு காவல்துறையினரிடம் பட்டியலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புழல் மற்றும் திருச்சி சிறையில் இருந்தபடியே இதற்கான திட்டங்களை வகுத்து 7 பேர் மூலம் செயல்படுத்தியதாகவும் கூறியுள்ளான். 

முருகன் மீது, கர்நாடகாவில் சுமார் 100 இடங்களில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். அது தொடர்பாகவும் முருகனிடம் விசாரிக்க வேண்டும் என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேபோல சென்னையில் எந்தந்த இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விவரங்களை பெங்களூரு காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி சென்னை மாநகர பகுதியில் சுமார் 60 இடங்களில் கொள்ளையடித்ததாக முருகன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அண்ணாநகர், கே.கே.நகர், திருமங்கலம், அமைந்தகரை ஆகிய இடங்களில் கைவரிசை கட்டியதாகவும் முருகன் தெரிவித்துள்ளான்.

சென்னையில் கொள்ளையடித்த நகை பணம் ஆகியவற்றை முருகன் தற்போது வைத்திருக்கிறானா? அல்லது உல்லாசமாக இருக்க அவற்றை செலவழித்துவிட்டானா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது, தான் கொள்ளையடித்த பணத்தில் காவல்துறையினருக்கும் இலஞ்சம் கொடுத்துள்ளதாக முருகன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான். 

இதற்கிடையே செங்கம் அறங்கூற்றுமன்றத்தில் சரண் அடைந்த சுரேசை திருச்சி கோட்டை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.  விசாரணையில் பரபரப்பு தகவலை சுரேஷ் தெரிவித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:-

எனது மாமா (முருகன்) என்னை கதைத்தலைவனாக வைத்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டார். அதன்படி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க தொடங்கினோம். 45 நாட்கள் படபிடிப்பு நடந்த நிலையில் நிதித்சிக்கலால் படம் பாதியில் நின்று விட்டது.

அதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதைத்தலைவியாக  நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை ஐதராபாத் அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் வெளியிட முடியவில்லை. தொடர்ந்து நிதிச்சிக்கலால்  மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

அதன்படி, திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளை போட்டு நகைகள், பணத்தை மாமா முருகன் திட்டபடி கொள்ளையடித்தோம். பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் பல முன்னணி கதைத்தலைவர்களுடன் நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். பல படங்களில் நடித்து வருவதால் நேரம் ஒதுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்றோம். அவரும் ஆர்வமாக அப்படியா? என்றார். பின்னர் மாமா, வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். கொள்ளையடித்த பணத்தில் நானும், மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம். என்று தெரிவித்துள்ளான்

கொள்ளைத் தொழிலை நிறுவனமாக நடத்துவதற்கு சாத்தியப் பட்டிருக்கிறது! அண்மையில் லலிதா நகைக்கடையில் கொள்ளையடித்த பிறகு பிடிபட்டிருக்கிறான் கொள்ளையன். ஆனாலும் இருமாநிலங்களில் 160 இடங்களில் கொள்ளை அடித்திருக்கிறானாம். இதில் கருநாடகத்தில் 100 வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,309.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.