Show all

புதியஆட்சி வரும்பொழுதுதான் நிரந்தர தீர்வு; விஜயகாந்த் அறிக்கை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியைச் சேர்ந்த தி.மு.க.வினரை அவைக்காவலர்களை வைத்து கூண்டோடு வெளியேற்றியதையும், அதே ஒரு வார காலத்திற்கு அவர்களை தற்காலிகநீக்கம் செய்து அறிவித்து இருப்பதும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையையே நினைவுபடுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தே.மு.தி.க. நாள்தோறும் மக்கள் பிரச்சனைகளையும், தொகுதி பிரச்சனைகளையும் பேச முற்பட்ட போதெல்லாம் இதுபோன்ற முறையற்ற நிகழ்வுகளையே அ.தி.மு.க. அரசு அரங்கேற்றியது. அவையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை முற்றிலும் செயல்படவிடாமல் தடுத்து, அரசுக்கு எதிராக யாரும் பேசி விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஒலிவாங்கிகளை செயல்படவிடாமல் செய்வதும், அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றுவதும், நீண்ட நாட்களுக்கு தற்காலிகநீக்கம் செய்வதும் என்று சட்டமன்ற மரபுகளைக் கேள்விக் குறியாக்கும் அளவு செயல்பட்டனர். நியாயத்தைக் கேட்ட தே.மு.தி.க.வினரின் உண்மை நிலையை மக்களிடையே கொண்டுசெல்ல விடாமல் பல்வேறு வகையிலும் தடுத்தனர். அதனால் தான் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது அவசியம் என்று வலியுறுத்தி பல தடவை அரசிடம் கேட்டும் பலனில்லாமல் போனது. நேரடி ஒளிபரப்பு செய்ய பல கோடி ரூபாய் செலவாகும் என்று காதில் பூ சுற்றுவதை போல சாக்குப் போக்கு சொல்லி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. தே.மு.தி.க. கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்ட சிரமத்தின் தொடர்ச்சியாக தி.மு.க.வின் இன்றைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இவர்கள் இருவரும் மாறி, மாறி இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி தமிழக சட்டசபையின் கலாச்சாரத்தை மாற்றிவிட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்தச் சட்டமன்ற, மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இவர்கள் இரண்டு பேர்களுக்கும் இடையே நடக்கும் போர்க்களமாகவே இந்த அவையை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்குத்தான் காமராஜர் சொன்னார் இந்த (அ.தி.மு.க., தி.மு.க.) இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு சான்றாகவே இந்த சட்டமன்றம் அரங்கேறி கொண்டுருக்கிறது. இந்த நிலைகள் தமிழகத்தில் முற்றிலும் மாற, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.