Show all

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் மழை அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் மழை காரணமாக, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர்வதால், தமிழகத்திற்குப் புயல் பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் மழையின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள போதிலும், பாதுகாப்பு நிலை உறுதி செய்யப்படும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடரும் என தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மூன்றாவது நாளாகக் கனமழை தொடர்வதால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

அதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை வாகனங்களின் சேவைகளும் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரங்களும் விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருவதாலும், வடமாவட்டங்களில் கனமழை தொடர்வதாலும் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

குறிப்பாக, வௌ;ளப் பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்துள்ள தமிழகத்தின் வடமாநில பகுதி மக்கள், மீண்டும் 6 மாத கால இடைவெளியில் அதே போன்ற வௌ;ளப்பெருக்கு சம்பவத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலை உருவாகிவிடுமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக செம்பரம்பாக்கம் உள்ளிட்ட தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய ஏரிகளின் கொள்ளளவு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் ஏரிகளின் இன்றைய நிலை குறித்து வெளியிட்ட விவரப்பட்டியலின்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் 80.83 அடிக்கு நீர் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 85.4 அடியாக உள்ள நிலையில், அதிலிருந்து வினாடிக்கு 160 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இது அபாயகர நிலை இல்லை என்றும், அதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அரசு அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மாநகர பணியாளர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு, மழை நீர் தேங்கும் பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர ஆணைய அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.

புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மீனவப் படகுகளும் ஒரு சில இடங்களில் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் உணவு தானியங்களை பாதுகாக்க போதுமான வசதி இல்லாத காரணத்தால் மழையில் நனைந்து அவை வீணாகப் போவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர் மழை காரணமாக, வேதாராண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.