Show all

கல்வி நிறுவனங்களுக்கு சோரம் போகும் அரசும், வங்கிகளும்! கஜாபுயல் நிவாரணம் கல்விக்கடனுக்கு வரவுவைப்பு

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா. கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று, புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ரம்யா, இயல் இளவல் செவிலியர் படித்திருந்தார்.

தற்போது, கஜாபுயலால் ராஜேந்திரனின் தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டன. இதையடுத்து, ரூ.34 ஆயிரம் நிவாரணத் தொகையை இவரது வங்கிக் கணக்கில் அரசு செலுத்தியது.

இந்தத் தகவல் ராஜேந்திரனின் செல்பேசிக்கு சேதி வந்தது. நிவாரணத் தொகையை பெறுவதற்காக வங்கிக்கு ராஜேந்திரன் சென்றபோது, அந்தத் தொகையை ஏற்கெனவே ரம்யாவின் படிப்புக்காக வழங்கப்பட்ட கல்விக் கடனுக்காக வங்கி நிர்வாகம் வரவுவைத்துக் கொண்டது தெரியவந்தது.

மேலும், ராஜேந்திரன் மற்றும்அவரது மனைவி ராணி ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்ததற்காக வழங்கப்பட்ட தொகையையும் வங்கி நிர்வாகம் வரவு வைத்துக்கொண்டதும் தெரியவந்தது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் உத்தரவிட்டுள்ள நிலையில், உழவருக்கு அரசால் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை வங்கி நிர்வாகமே வரவு வைத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து நிவாரணத் தொகையை விடுவித்துத் தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு ராஜேந்திரன் நேற்று கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

வரிவாங்கும் அரசு மக்களுக்கு கல்வியைத் தருவதைக் காட்டிலும் வேறு ஒன்று சிறப்பாகச் செய்து விட முடியாது. அந்தக் கல்விக்கு கட்டணம், அந்தக் கட்டணத்தைச் செலுத்த கடன் என்று தற்காலிகமாக தப்பித்து விடுகிறது அரசு. 

மக்களும் கடன் வாங்கி கல்வியைப் பெற்று, கடன் திருப்ப வழிவகையேது என்று தெரிந்து கொள்ளாமலே, கடனில் கல்வியைப் பெற்றுக்கொள்கின்றனர். 

அந்தக் கல்வியையும் வாழ்க்கைக் கல்வியாகவோ, பொருள் ஈட்டும் வகைக்கான கல்வியாகவோ கல்வி நிறுவனங்கள் தந்து விடுவதில்லை. 

மொத்தத்தில் கல்வி நிறுவனங்கள் பொருளீட்டிக் கொள்ள அரசும், வங்கிகளும் சோரம் போகின்றன ; பாதிக்கப் படுவதென்னவோ மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,031.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.