Show all

திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் உள்ளவர்களின் கனவு பலிக்காது! திருமாவளவன் திட்டவட்டம்

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எடப்பாடி-பன்னீர் அரசு கஜா புயலைக் காரணம் காட்டி, தள்ளிவைப்பு முயற்சி மேற்கொள்ளாவிட்டால், தமிழகத்தில் விரைவில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். 

இதற்கான கூட்டணி பற்றிய விவகாரங்கள் தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.  ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆளும் கட்சியை புகழ்ந்து பேசியதால் அவருக்கும் திமுக-வுக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது. 

இதற்கிடையே, இன்று நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 'நடுவண் ஆய்வு குழுவினர் சாலைகளில் மட்டுமே பயணம் செய்து கிராமத்துக்குள் இருக்கும் மக்களைச் சந்திக்காமலே சென்றுவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நடுவண் அரசின் ஆய்வுக் குழு புயல் பாதித்த அனைத்து இடங்களுக்கும் சென்று முழுமையாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இழப்பீடுகளை வழங்க வேண்டும். அதற்கு ஆய்வுப் பணிகளில் சிறந்த அனுபவமுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என வி.சி.க கேட்டுக்கொள்கிறது. 

தி.மு.க கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம். தமிழகத்தில் யாரும் யாரையும் சந்திக்கலாம். ஆனால், தேர்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகத் தெளிவாக உள்ளது. நான் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை முதல்வரை நேரில் சந்தித்தேன். நேற்று கொத்தமங்களத்தில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது, தினகரனை எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது. இந்த சந்திப்புகள் அனைத்தும் மக்களுக்காக மக்கள் களத்தில் நிகழ்ந்தவை. ஆனால், தேர்தல் களத்தைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்று சேர்வது என்பது உறுதியாக உள்ளது. திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லீம் இயக்கங்கள் ஆகிய கட்சிகள் அனைத்தும் இணக்கமாகவே உள்ளன. திமுக-வைப் பின்தொடர்ந்து நாங்கள் தோழமைக் கட்சிகளாக உள்ளோம். இது வருங்காலத்தில் கூட்டணியாவதற்கும் வாய்ப்புள்ளது. திமுக, தற்போது கூட்டணி இல்லை எனக் கூறியதால் அதில் மதிமுக-வும் விசிக-வும் இல்லை எனக் கூற முடியாது. பிற்காலத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள்வோம். நிச்சயம் இந்தக் கூட்டணி வலுப்பெறும். திட்டமிட்டே சில பேர் திமுக-வை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் கனவு பலிக்காது' எனத் தெரிவித்தார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,984.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.