Show all

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்கள்

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் அருகே அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் தற்கொலைப்படை தாக்குதலும், பின்னர் துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடந்தன. தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதி நகரமான ஜலாலாபாத் பகுதியில் இந்திய தூதரகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு காவலர்கள் மற்றும், ஆப்கான் பாதுகாப்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்திய தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி கடைக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஜலாலாபாத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மீதும், மசர் இ ஷரீப் நகரிலும் இந்திய துணை தூதரகத்தின் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று இருந்தனர். இந்த தாக்குதல் நடந்த சில மாதங்களில் தற்போது மீண்டும் இந்திய தூதரகம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.