Show all

திமுக கூட்டணியில் பாமக இல்லை; இருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது! திருமாவளவன்

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக கூட்டணியில் பாமக சேராது என்றும், அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சியான திமுக தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த அணியில் பாமகவை சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் முரண்பட்ட இரு கட்சிகளான பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

கூட்டணியில் பாமகவை சேர்க்க திமுகவினர் முயற்சித்து வருவதாக கூறுவது தவறு. சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தாராளமாக சேர்த்து கொள்வார்கள். அதற்காக சுற்றி வளைத்தெல்லாம் பேச மாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் பாமக சேராது. அதற்கான வாய்ப்பு இல்லை. விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக பேசினால் தான் சாதி ஓட்டுக்களை வாங்க முடியும் என்று பாமக நினைக்கிறது.

அதனால்தான் விடுதலை சிறுத்தைகளைப் பழித்து பேசுவதை குறிக்கோளாக அவர்கள் வைத்துள்ளனர். திட்டமிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது. இவ்வாறு திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,997.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.