Show all

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவைத்த உரை! மாநிலங்களவையில் கனிமொழி முழக்கம். பாஜகவைத் திருத்த அல்ல; பாஜகவை அகற்ற; மக்களைக் கூர்தீட்ட

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப் பட்டு வரும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் உரை: 

மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக ஆரிய ஆதிக்க அதிகாரத்தால் குழிதோண்டிப் புதைக்கப் பட்ட, சமூக நீதியை மீட்க, பெரியார் வழியில் போராட்டத்தில் வென்றெடுத்த  இடஒதுக்கீட்டை, கேள்விக்குள்ளாக்கும் பாஜகவின் பத்து விழுக்காடு இடஒதுக்கீடு என்ற பெயரில் மீண்டும் மேலாதிக்கத்தினருக்கான அதிகாரப் பரவலாக்கத்தை கண்டித்து கனிமொழி நேற்று மாநிலங்களவையில் ஆற்றிய உரை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மசோதாவைத் பதிகை செய்தார். 

மசோதா நிறைவேற்றுவதற்கு முன்பு சுமார் 4 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. தி.மு.க, அ.தி.மு.க சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இந்த விவாதத்தின்போது பேசிய கனிமொழி அழுத்தம் திருத்தமாக தன் கருத்துகளைப் பதிவு செய்தார். அதன் தமிழாக்கம்: 

நடுவண் அரசின் புதிய இட ஒதுக்கீடு மசோதாவைத்தான் எதிர்க்கிறேன். அண்ணல் அம்பேத்கரின் கூற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டால், அதனை எரிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருக்கும் என்பதே அது. இன்று அரசியலமைப்பையும், சட்டத்தையும் கேலிக் கூத்தாக்கிவிட்டார்கள். அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை ஒரு இரவுக்குள் அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவைதான் என்ன?

நான் பெரியார் மண்ணிலிருந்து வந்துள்ளேன். சமூக நீதியை நிலைநாட்டும் மண் எங்களுடையது. எங்கள் மண்ணில்தான் சாதி என்னும் பேரில் புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டுவர, முதன்முதலாக இடஒதுக்கீட்டை நீதிக்கட்சி ஆட்சி கொண்டு வந்தது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.  ஆனால் அந்த இடஒதுக்கீடும், இதுவும் எப்போதும் ஒன்றாகாது. நடுவண் அரசின் 10விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இடஒதுக்கீட்டின் அடிப்படையிலிருந்து முற்றிலும் முரண்படுகிறது. சாதி, மதத்தின் பெயரால் மக்களை ஒடுக்கிய வரலாற்றுப் பிழையை அகற்றவே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. காலங்காலமாகச் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை. இட ஒதுக்கீடு பாவம் புண்ணியம் பார்த்து அரசு கொடுப்பது கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை அது. பொருளாதாரத்துக்கும் அவர்கள் ஒடுக்கப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள் குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்தால் ஒடுக்கப்படுகிறார்கள். பட்டியலின குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் தனி குடிநீர் பானை வைக்கும் முறை இன்னும் சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த குழந்தைகளின் மனநிலையைச் சற்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரே பள்ளி வளாகத்தில் தாங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டு நடத்தப்படுவதை அந்தக் குழந்தைகள் எப்படி மறக்கும். வேலை பார்க்கும் இடங்களில் கூட இந்தத் தீண்டாமை இன்னும் அகற்றப்படவில்லை. தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் மதத்தை மாற்றிக் கொள்ளலாம், உங்கள் பொருளாதார நிலையை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்நாட்டில் என்றைக்கும் உங்கள் சாதியை மாற்றிக் கொள்ள முடியாது. 

சச்சார் கமிட்டி அறிக்கையில் இந்த நாட்டின் முஸ்லிம் சகோதர சகோதரிகள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் எப்படிப் பின் தங்கியிருக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். அதுபற்றி இந்த அரசு கவலைப்படுவதில்லை. 

இஸ்லாமிய சகோதரிகள் மீது மட்டும் ரொம்பவே கவலைப்படுகிறது இந்த அரசு. 

ஏன் முஸ்லிம்களுக்கு  இட ஒதுக்கீடு கொண்டு வாருங்களேன். நாங்கள் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டுவந்தோம். 

கல்விக் கடன்  விவகாரத்தில் என்ன நடக்கிறது, கல்விக் கடன் இப்போது வழங்கப்படுவதே இல்லை, ஏற்கெனவே வாங்கிய கல்விக் கடனை இளைஞர்களால் கட்ட முடியவில்லை. காரணம் அவர்களுக்கு வேலை இல்லை. கல்விக் கடனை திரும்பச் செலுத்த தாமதமானது என்றால் அவர்கள் வங்கிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்கிறது, அவர்களுக்கு உதவாத அரசாங்கம் பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பவர்களுக்கு என்ன உதவப் போகிறது?

பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது. ஆனால் உச்ச அறங்கூற்றுமன்றம் இது தொடர்பான வழக்கில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு நிர்ணயிக்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. சமூக ரீதியான பின் தங்கியவர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் பட்சத்தில் இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படைக் காரணியாக கருதவே முடியாது என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கூறியிருக்கிறது. ஒன்பது அறங்கூற்றுவர்களில் எட்டு அறங்கூற்றுவர்கள் ஒத்த கருத்துடன் வழங்கப்பட்ட தீர்ப்பு இது என்று பேசினார். 

கனிமொழி பேசிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்ட மாநிலங்களவை துணை பேரவைத்தலைவர், உங்கள் நேரம் முடிந்துவிட்டது; உரையை முடியுங்கள்' என்றார். அவருக்குப் பதிலளித்த கனிமொழி, தேர்தலுக்காக அவசரம் அவசரமாக இந்தச் சட்டத்தை மோடி அரசு கொண்டுவருகிறது. மசோதாவுக்கு எதிராக இங்கு வெகுசிலரே குரல் எழுப்பியுள்ளனர். அதனையும் பேசவிடாமல் தடுத்தால் எப்படி என்று கூறி தன் உரையைத் தொடர்ந்தார்.

நாட்டின் முதல் தலைமை அமைச்சர் நேரு கொண்டுவந்த முதல் அரசியல் சாசன திருத்தத்தில் சமூக, கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்தார். அதில் பொருளாதார அடிப்படையில் என்ற வார்த்தையைச் சேர்ப்பதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் இன்று பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்குப் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு என்று இந்த அரசு சொல்கிறது.

நான் கேட்கிறேன் பத்து விழுக்காடு என்று எந்த அடிப்படையில் தீர்மானித்தீர்கள். அரசு ஆய்வு ஏதும் நடத்தியதா, தி.மு.க அரசாங்கம் தமிழகத்தில் சட்டநாதன் ஆணையம், அம்பா சங்கர் ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களை அமைத்து அறிவியல் ரீதியாகப் பல கட்ட சமூக ஆய்வுகள் நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

 

மண்டல் குழு அமைத்து அதன் அடிப்படையில் மத்தியிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் இன்று திடீரெனப் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு என்கிறீர்கள். இந்த எண்ணிக்கையை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அது தொடர்பாக என்ன மதிப்பீட்டாய்வு செய்தீர்கள்.  நீங்கள் சொல்லும் இந்த எண்ணிக்கை நீங்கள் யாருக்காக இதைக் கொண்டுவருவதாகச் சொல்கிறீர்களோ அவர்களுக்கு உதவக் கூடியதா. அரசாங்கம் எதுவும்  சொல்லவில்லையென்றாலும் எட்டு லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் என்று இந்த இட ஒதுக்கீட்டுக்கு அளவுகோல் நிர்ணையிக்கப்பட்டுள்ளதாகச் செய்தித் தாள்களில் வருகின்றன. அப்படிப் பார்த்தால் இந்த வரம்புக்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் வந்துவிடுகிறார்களே?

முறைப்படுத்தப்படாத சரக்கு-சேவை வரி, பணமதிப்பழிப்பு போன்றவற்றால் தமிழ்நாட்டின் திருப்பூர் உள்ளிட்ட இந்த நாட்டின் ஒட்டுமொத்த சிறுதொழில் பொருளாதாரத்தையே சிதைத்த நீங்களா பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பற்றிப் பேசுகிறீர்கள்?

நாடுமுழுதும் உழவர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். பல உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் தமிழ்நாட்டு உழவர்கள் இந்த டெல்லி மண்ணில் மாதக் கணக்கில் தங்கிப் போராடினார்கள். ஆனால் அவர்களை சந்திக்க தலைமை அமைச்சருக்கு நேரம் இல்லை. உழவர்களின் பொருளாதாரம் பற்றியெல்லாம் இந்த அரசு கவலைப்படவில்லை. இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் உழவர்கள் என்ன சம்பாதிக்கிறார்கள்? ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் மேலும்மீத்தேன் எடுக்க முயற்சி செய்கிறீர்கள்.

இப்படியெல்லாம் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இட ஒதுக்கீட்டுக்குப் பொருளாதாரத்தை ஒரு அடிப்படைக் காரணியாக எப்படிப் பொருத்துவீர்கள்? அசாதாரண நிலை ஏற்பட்டால் ஒழிய இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவோ, திருத்தவோ கூடாது என்று தீர்ப்பு இருக்கிறது. இந்நிலையில் பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டுவர இப்போது என்ன அவசரம்? இன்னும் 100 நாள்களில் தேர்தல் வருவதுதான் உங்களுக்கு அசாதாரணமான சூழலாகத் தெரிகிறதோ என்று கருதுகிறேன்.

நடுவண் அரசுப் பணிகளில் இன்றுவரை பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அணி.அ பணிகளில் 17விழுக்காடு இட ஒதுக்கீடும், அணி.ஆ பணிகளில் 14விழுக்காடு இட ஒதுக்கீடும், அணி.இ பணிகளில் 11விழுக்காடு இட ஒதுக்கீடும், அணி.ஈ பணிகளில்10விழுக்காடு இட ஒதுக்கீடும்தான் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் இந்த இட ஒதுக்கீட்டையே உங்களால் ஒழுங்காக நடைமுறைப்படுத்த இயலவில்லை. பிறகு எதற்கு வேறு கனவுகளுக்கு வண்ணம் பூசுகிறீர்கள்?

நேற்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் பேசும்போது, 'இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு அனுப்பப்படாது' என்று கூறியிருக்கிறார். அவர் நாட்டின் மிகச் சிறந்த சட்ட மூளைக் காரர். அவரது அறிவுக் கூர்மையை நான் வியக்கிறேன். ஆனால் இது எப்படி சாத்தியம்? இந்த மசோதா நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் பாதிக்கும்.

எனவே நான் இந்தப் புதிய சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆய்வுக்குப் பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இதனிடையே கனிமொழி பேசிக்கொண்டு இருக்கும் போது மாநிலங்களவை துணை பேரவைத்தலைவர், உங்கள் நேரம் முடிந்துவிட்டது என ஹிந்தியில் கூறினார். அதற்கு கனிமொழி தயவு செய்து எனக்குப் புரியக்கூடிய மொழியில் பேசவும் என்றார். அதன்பின் துணை பேரவைத்தலைவர் ஆங்கிலத்தில் அவரிடம், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் எப்போதோ முடிந்துவிட்டது. உரையை முடித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார். அதற்குக் கனிமொழி நான் பேச வேண்டும். பல லட்சம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை இங்கு பதிவு செய்கிறேன்' என்று தொடர்ந்து பேசினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,028.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.