Show all

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை.

நிலக்கரி சுரங்க முறைகேட்டு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக  எந்த ஆதாரங்களும் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் பெரும் அளவில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி மது கோடா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த ஊழல் வழக்கில் நிலக்கரி துறையை கவனித்து வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும், அரசு துறை செயலாளர்கள் ஆனந்த் சுவரூப், ஜெய் சங்கர் திவாரி ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுகோடா சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி பாரத் பராசகர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா, நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. சிறப்பாக விசாரித்து வருகிறது. ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் முக்கிய வழக்கை திசை திருப்பவும், நீதிமன்றத்தின் காலத்தை விரயமாக்கும் வகையிலும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்தார். மீதமுள்ள இரு அதிகாரிகள் பற்றி குறிப்பிட்ட சிபிஐ வழக்கறிஞர், அவர்கள் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் எனவும், சதிகளில் ஈடுபட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.