Show all

தமிழக முதல்வர், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கை:

நடப்பாண்டில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1855 கோடியே 36 லட்சம் மதிப்பிலான சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கை:

1. திருவண்ணாமலை நகரில் கோயிலைச் சுற்றி அமையப் பெற்றுள்ள கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக முதற்கட்டமாக, 7 மீட்டர் முதல் 10 மீட்டர் அகலமுள்ள நடைபாதை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். மேலும், ஓய்வு அறை வசதிகள் செய்து தரப்படும். இவை 65 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

2. விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் சாலைகளில், விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகளை உள்ளடக்கிய, நடைபாதை ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நிதி நிலைக் கூட்டத் தொடரின் போது அறிவித்தவாறு முதற்கட்டமாக 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, 2015-2016-ல் இரண்டாம் கட்டமாக 150 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.

3. ரயில்வே கடவுகளுக்கு பதிலாக மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் அமைக்கும் பணிகள்;, சேலம் மாவட்டத்தில் 5 பணிகள், வேலூர் மாவட்டத்தில் 2 பணிகள், கோயம்புத்தூர், கடலூர், மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பணி என 7 மாவட்டங்களில் 12 பணிகள் 665 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

4. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டம், பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் கோட்டங்களில் செயல்படுத்தப்படுவதை தொடர்ந்து, நடப்பாண்டில் திருவள்ளூர் கோட்டத்தில் செயல்படுத்தப்படும். 485 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலைகளும், 278 கி.மீட்டர் நீள மாவட்ட முக்கிய சாலைகளும்; 680 கோடி ரூபாய் மதிப்பில் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.

5. ஓரகடம் தொழிற்பூங்கா பகுதியில் சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிங்கபெருமாள் கோயில் - திருப்பெரும்புதூர் மாநில நெடுஞ்சாலையில், சிங்கபெருமாள் கோயில் முதல் ஓரகடம் வரை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டதின்படி இப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதன் தொடர்ச்சியாக வண்டலூர் முதல் ஓரகடம் வரையிலான நான்கு வழிச் சாலை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணியில் 3.8 கிலோ மீட்டர் நீள படப்பை புறவழிச் சாலை உள்ளிட்ட 20 கிலோ மீட்டர் நீளச் சாலை அமைக்கப்படும். இவை 200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

6. பெரிய தெற்கத்தியச் சாலையில் கிலோ மீட்டர் 32ஃ4ல் வண்டலூர் - மாம்பாக்கம் - கேளம்பாக்கம் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் ஓர் உயர்மட்டப் பாலம் 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

7. சென்னை பெருநகர பகுதிகளில், உள்வட்ட சாலையில் கொளத்தூர் பகுதியில் இரட்டை ஏரி அருகில், பெரம்பூர் - செங்குன்றம் சாலை சந்திப்பில் 52 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் இடது புற சாலையில் மேம்பாலப் பணி முதற்கட்டமாக நடைபெற்று வருகின்றது. இரண்டாம் கட்டமாக, வலது புறச் சாலையில் மேம்பாலப் பணி நடப்பாண்டில் 2015-16-ல் 35 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.