Show all

பிஎஸ்என்எல்லில் ரூ.249-க்கு மாதம் 300ஜிபி அகன்ற அலைவரிசை சேவை

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் நடுவண் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.249-க்கு மாதம் 300ஜிபி அளவுக்கு இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் “ரிலையன்ஸ் ஜியோ”வின் வருகை மற்ற அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் சவாலான ஒன்றாகவே உள்ளது. போட்டியாளர்களுக்கு இணையாக கட்டணச் சலுகையில் சேவைகளை வழங்கவும், தொலைத்தொடர்பு சந்தையில் நீடித்து இருக்க ஜியோவிற்கு இணையான கட்டணத்தில் சேவை வழங்கும் விதமாக பி.எஸ்.என்.எல். “அனுபவம் எல்லையில்லா அகன்ற அலைவரிசை 249” திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 1 ஜிபி இணைய சேவையை ரூ.1-க்கும் குறைவான செலவில் பயன்படுத்த முடியும். இணைய பயன்பாடு 300ஜிபியைத் தாண்டினாலும், ஒரு ஜிபி இணையத்துக்கான கட்டணம் ரூ.1-க்கும் குறைவாகவே கணக்கிடப்பட்டு, மொத்த பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. “அனுபவம் எல்லையில்லா அகன்ற அலைவரிசை 249” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் புதிதாக அகன்ற அலைவரிசை சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அகன்ற அலைவரிசை சேவை என்பது பி.எஸ்.என்.எல் இதுவரை அறிவித்த இணையத்தள சேவைகளிலேயே மிகவும் குறைவான கட்டணத்தைக் கொண்டதாகும். இனிமேல் புதிதாக அகன்ற அலைவரிசை சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள் முதல் 6 மாதங்கள் ரூ.249-க்கு சேவையைப் பெறலாம். அதற்குப் பிறகு இந்தச் சேவைக்கு ரூ.499 செலுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல் அகன்ற அலைவரிசை இணையச் சேவையில் நிறைய வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் முயற்சியாக நாடு முழுவதும் “அனுபவம் எல்லையில்லா அகன்ற அலைவரிசை 249” திட்டம் இன்று (செப்.9) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதனால் நிறைய வாடிக்கையாளர் பயன் பெறுவதற்கான வாய்ப்பு ஏதும் ஏற்படப் போவதில்லை யென்பதே உண்மை. பல பகுதிகளில் பி.எஸ்.என்.எல்.க்கு விண்ணப்பித்த பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு இணைப்பு கொடுப்பதற்கு சாத்தியமேயில்லை யென்பதே விடையாக இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.