Show all

போற்றுவோம்- தமிழ்தொடர்ஆண்டுக்கணக்கை! மீட்டுக் கொண்டாடுவோம்- தமிழர் வரலாற்றை

நுட்பமான கணக்கீடுகளைக் கொண்ட தமிழ்தொடர்ஆண்டுக்கணக்கை நாம் மறந்து விட்டு, ஆரியர் வடமொழியாக்கம் செய்துவிட்ட பிரபவ எனத் தொடங்கும் சுழல் ஆண்டுக்கணக்கையும், மணிக்கட்டில் மாதங்களுக்கான நாளை கணக்குப் போடுகிற எளிய முறை என்பதற்காக ஆங்கிலக் காலக்கணக்கையும் பின்பற்றி வருகிறோம். போற்றுவோம்- தமிழ்தொடர்ஆண்டுக்கணக்கை!

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆரியர்களுக்கு- காலக்கணக்கெல்லாம் பெரிதாக எதுவும் கிடையாது. பழந்தமிழர்களுக்கு தொடர் ஆண்டுக் கணக்கும் உண்டு. சுழல் ஆண்டுக் கணக்கும் உண்டு. தொடர் ஆண்டுக்கணக்கு நுட்பமான அளவீடுகளைக் கொண்டது. சுழல் ஆண்டுக்கணக்கு எளிமையானது. சுழல் ஆண்டுக் கணக்கிற்கு நம் முன்னோர் வைத்திருந்த பெயர்களை வடமொழியில் மொழிபெயர்ப்பு செய்து அதை தங்களுடைய காலக்கணக்காக அங்கீகரித்துக் கொண்டனர் ஆரியர். தமிழர்தம் இரண்டு காலக்கணக்கிற்குமே தொடக்கம் சித்திரை முதல் நாள்தான்.

தமிழர் நாள் தொடக்கம்-

காலை கதிரவன் உதயம்.

ஆரியர் நாள் தொடக்கம்-

நன்பகல்.

ஐரோப்பியர் நாள் தொடக்கம்-

நள்ளிரவு.

இருளுக்கும் ஒளிக்கும் மையப்பகுதி கதிரவன் உதயம்.

பழந்தமிழர் “இருவேறு உலகத்தியற்கை" என்று கண்டுணர்ந்தவர்கள். அதன் பொருட்டே தமிழர் இருப்புக்கும்(ஒளி)

இல்லாநிலை(இருள்)க்கும் மையமான கதிரவன் உதயத்தை தொடக்கமாகக் கொண்டனர்.

ஆரியர் இருப்பை போற்றிக் கொள்பவர் அதன் பொருட்டு அவர்கள் நண்பகலைத் தொடக்கமாகவும் இல்லாநிலையிலிருந்து இருப்புநிலை தோன்றயதாக ஐரோப்பியர் நள்ளிரவை தொடக்கமாகக் கொண்டது இயல்பாக பொருந்திவிட்ட அடிப்படையே. 

தமிழர் ஆண்டுத் தொடக்கம் என்பது:

இளவேனில் பருவத்தின் தொடக்கமாகிய சித்திரையே தமிழர் தம் ஆண்டுத் தொடக்கமாகும்.

ஆங்கிலேயர் வரவு- தமிழர் ஆரிய மாயையிலிருந்து விடுபட உதவியது. ஆனாலும் அது ஐரோப்பிய மாயைக்கு மடை மாற்றியதும் மறுக்க முடியாத உண்மை.

ஐரோப்பியரின் ஆண்டு இரண்டாயிரத்து பத்தொன்பதே என்பதால் தமிழகத்தின் எந்த வரலாற்று நிகழ்வையும் 2019 ஆண்டுகளுக்கு முந்தி எடுத்துச் செல்வதற்கு தயங்கி தயங்கி நொண்டத் தொடங்கி விடுவோம். கரிகாலன் கல்லணை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மட்டுமே முந்தையது என்போம்.

திருவள்ளுவர் காலத்தைப் போனால் போகிறது என்று 2019உடன் ஒரு32ஐ மட்டும் கூட்டிக் கொள்வோம். தமிழின் பழைமையைப் பிச்சைப் போடுவதைப் போல இரண்டாயிரம் ஆண்டுகள் என்று நிர்ணயிப்போம். 

எந்த அயல் மாயையிலும் தமிழன் நிற்க வேண்டியதில்லை. தமிழர் பழைமையை நிறுவ தமிழ் மொழியியல் ஆய்விலேயே ஏராளமான சான்றுகளைத் திரட்டலாம். தற்கால தமிழ் அறிஞர்கள் (உறுதியாக போற்றிக் கொள்ள வேண்டியவர்கள்! தாள்களை தமிழ்ச் சமுதாயம் தொட்டு ஒற்றிக் கொள்கிற அளவுக்கு போற்றிக் கொள்ளக் கூடியவர்கள்தான் பாவாணர். மறைமலை, காசுப்பிள்ளை உள்ளிட்டோர்) திருவள்ளுவர் ஆண்டை ஏசு அவர்களின் அகவையோடு 32 சேர்த்துப் பயன்படுத்தலாம் என்று திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கைத் தொடங்கினார்கள். ஆங்கில ஆண்டோடு 32 கூட்ட வேண்டிய காரணத்தின் எளிமைக்காக ஆங்கில ஆண்டு பிறக்கிற தை மாதத்திற்கு தொடக்கமாகக் கொண்டார்கள். மற்றபடி சிறப்புக் காரணம் எதுவும் இல்லை. 

இன்று நாள்: 19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121.

தமிழனுக்கு 5120ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான காலக்கணக்கு உண்டு. தமிழ் போன்ற இலக்கிய, காப்பிய (தொல்காப்பயம், பல்காப்பியம் என்பன இலக்கண நூல்கள். இலக்கணம் என்பது பிற்காலச் சொல்) வளம்மிகுந்த ஒரு சீர்மைமிகு மொழி வெறுமனே இரண்டாயிரம் ஆண்டு அகவை உடையது என்பது கண்பார்வை இல்லாதவர்கள் யானையைத் தடவிப் பார்த்து உணர்ந்து கொள்ள முயன்ற கதைதாம்.

தமிழ்-

சைகை மொழியாக (நடிப்பு,நாடகம்) முன்னெடுக்கப் பட்டு,

பின்னர்- 

ஏய்ய்ய்ய்ய், வாஆஆஆஆ, போஓஓஓஓஓ என அளபெடைகளாக நீட்டி ஒலித்த மொழியாக (பாடல்,இசை) தொடரப் பட்டு

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என தமிழ்ச்சங்கம் அமைத்து சீர்மையோடு கட்டமைக்கப் பட்ட மொழியாக (இயல்) வளர்ந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நடை போட்டு வந்த மொழி; நம் தமிழ் என்பதாலேயே தமிழ்மொழியை- 

நடப்பிலிருப்பதை முன்னிறுத்தும் வரிசையில் இயல்தமிழ், (இயற்றமிழ்) இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகியன என்றவாறு முத்தமிழ் என்றனர் நம் முன்னோர்.

அந்த வரிசையை அப்படியே கால அடிப்படை வரிசையாக எடுத்துக் கொண்டு தமிழின் கிளை மொழியான தெலுங்கிசையே தமிழிசைக்கு முந்தைய இசை என்று  காட்டிட முனைந்தோரும் உண்டு.

தமிழருக்கு நாடகக்கலை என்பதோ இசைக்கலை என்பதோ இன்றைக்கு நேற்றைக்கானதன்று.

சந்தப்பாடல், நாட்டுப்புறப்பாடல், கூத்துப்பாடல் என்பனவற்றின் அடுத்த கட்டமாக இப்போது உரைநடையால் நடிக்கவும் பாடல்களைப் பாடவும் கூட செய்கிறோம். உரை நடையால் நடிப்பதும் பாடுவதும் காலத்தால் பிந்தையதே யொழிய நாடகத்தமிழும் இசைத்தமிழும் காலத்தால் பிந்தையது எனக் காட்ட முயல்வது-

தமிழை வேறு ஒரு மொழியின் கிளை மொழி எனக் காட்டுவதற்கான முயற்சியாகும்; 

தமிழர்கள் தம் தலையில் தாமே மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளக் கூடாது.

வேறு ஓரு மொழியலிருந்து கிளைத்த மொழிகளுக்கு வேண்டுமானால் வரலாறு பின்னிருந்து தொடங்கலாம்.

தமிழர்கள்-

ஆரிய, ஐரோப்பிய, அராபிய, மார்க்சிய, மத அயலவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்து விட்டு,

அவர்களிடம் உடலுழைப்புக் கூலியாகவோ நிருவாகக் கூலியாகவோ இயங்கிக் கொண்டிருப்பதால், 

அயலர் தம்முடைய உடைமையை வளர்த்துக் கொள்ள தமிழர் திறமையும் பேணப்பட வேண்டும் 

தமிழர் வரலாற்றைத் தெரிந்து கொண்டு உடைமை நிறுவு முயற்சியில் தமிழராகிய நாம், 

ஈடுபட்டுவிடவும் கூடாது என்கிற போக்கில் தமிழர் கையை வைத்தே தமிழர் கண்ணைக் குத்தும், தமிழர் வரலாற்று மறைப்பாகும்.

தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.

ஆனால் தமிழ் ஆண்டு காலை கதிரவன் உதயத்தில் தொடங்காது.

ஏனென்றால்- 

ஓர் ஆண்டு என்பதற்கு கால அளவு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை என முழுமையில்லாமல் இருப்பதுதாம்.

இந்தக் கால அளவு தமிழர் தம் விருப்பத்திற்கு கற்பனையாக அமைத்துக் கொண்ட கால அளவு அல்ல! 

நாம் வசிக்கும் இந்தப் புவியானது கதிரவனை ஒரு முழுச்சுற்று சுற்றுவதற்கான காலமாகும்.

நடப்பு தமிழ் தொடர் ஆணடு- 5121

இன்றைய விஞ்ஞானத்தில் கருவிகள் மூலம் வான மண்டலம் குறித்து ஏராளமான செய்திகளைக் கண்டுபிடித்திருக்கிறோம்.

வானவியலுக்கு முன்னோடியான தமிழனுக்கு இத்தனைச் செய்திகளும் அன்றைக்கே தெரிந்திருந்தது. என்றெல்லாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது.

பூமி ஞாயிறைச் சுற்றுகிறதா? ஞாயிறு பூமியைச் சுற்றுகிறதா என்பதைத் தமிழன் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தான் என்று அறுதியிட்டுக் கூறவும் முடியாது.

ஆனால் ஞாயிறுக்கும் பூமிக்கும் தொடர்புடைய இரவு பகல் என்கிற நாள் சுழற்சி,

ஆறு பருவ மாற்றங்களை உள்ளடக்கிய ஆண்டுச் சுழற்சியைத் தெளிவாக அறிந்திருந்தான்.

நாள் சுழற்சிக்கு 60நாழிகை யென்றும் ஒரு நாழிகைக்கு 60 விநாழிகையென்றும் ஒரு விநாழிகைக்கு 60 தற்பரையென்றும்

அதே போன்று ஒரு முழுமையான ஆண்டு சுழற்சிக்கு 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை யென்று காலத்தைக் கணித்து தலைமுறை தலைமுறையாக 5120 ஆண்டுகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறான்.

சித்திரை,வைகாசி-இளவேனில்

ஆனி,ஆடி-முதுவேனில்

ஆவணி,புரட்டாசி-கார்

ஐப்பசி,கார்த்திகை-குளிர்

மார்கழி,தை-முன்பனி

மாசி,பங்குனி-பின்பனி

என்று அவன் கணித்த

பூமிக்கும்-ஞாயிறுக்கும் சம்பந்தப்பட்ட பருவகாலம் 5120 ஆண்டுகளாகவும் அப்படியே அதே மாதங்களில் நடைபெற்று வந்ததிலிருந்து ஓர் ஆண்டு என்பது 365நாள் 15நாழிகை 31விநாழிகை 15தற்பரை கொண்டது என்று தமிழன் 5120 ஆண்டுகளுக்கு முன்னமேயே கணித்தபடி சரி

என்று இயற்கை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது!

ஆனால் உலகினரோ ஒரு ஆண்டுக்கான கால அளவை முழுமையாக கணிக்க இயலாமல் 

பருவகாலத்தைப் பொருத்திப் பார்த்து இன்றுவரை மாற்றம் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை கீழ்கண்ட ஆங்கில ஆண்டு வரலாற்றை ஒப்பு நோக்கி அறியலாம். 

நடப்பு ஆங்கில ஆண்டு 2019.

“ஆங்கில வருடமானது ஐரோப்பாக் கண்டத்தில் ஏசு பிறந்த காலம் முதல் கணிக்கப் பெற்று வருகிறது. இந்த ஆங்கில வருடமானது நமது தமிழ் 3104ஆம் ஆண்டில் வியாழக் கிழமையன்று தொடங்கியது. அதாவது முதல் ஆங்கில ஆண்டின் முதல் தேதியானது வியாழக்கிழமையன்று ஆரம்பமாகியது.

ஆங்கில வருடமானது ஐரோப்பியக் காலண்டர்படி 365நாள் என்று ஆதியில் கணிக்கப்பெற்று வந்தது. பின்பு வந்தவர்கள் இதில் ஒரு தினத்தில் சொற்ப பாகம் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து சில திருத்தங்கள் செய்தனர். 

இந்த திருத்தத்தின் படி 400வருடத்திற்கு ஒருமுறை 3நாட்களும் சில நாழிகையும் அதிகப் பட்டு வந்தது. கிபி 1582இல் இந்த 3 நாள் மீதத்தின் வித்தியாசத்தைச் சரி படுத்த எண்ணி லீப் வருடகணித முறையைக் கொண்டு வந்தனர்.

கிபி1600,1700,1800ஆகிய ஆண்டுகளின் கடைசி வருடத்தை சாதாரண வருடமாகக் கணக்கிட்டு அதில் வரும் பிப்ரவரி மாதத்திற்கு29நாட்களாக மாற்றினர் இதனால் 3நாட்கள் வித்தியாசக் கணக்கு சரியாயிற்று. ஆனால் நாழிகைக் கணக்கில் கொஞ்சம் மிச்சமாக வந்தது இந்த மிச்சத்தால் 4000ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் வித்தியாசமாகும் என்று கணக்கிடப்பட்டது. கிபி1582ல் இப்படிச் செய்யப் பட்ட திருத்தத்தால் அதற்கு முன்னர் ஏற்கெனவே குறைந்து இருந்த 10நாட்களை சீர் படுத்துவதற்காக கிபி1582 அக்டோபர்4 ஆம் தேதிக்குப் பதிலாக 15ஆம் தேதியாக வைத்துக் கொள்ளப் பட்டது.

இந்தப் புதிய ஏற்பாட்டை கிபி1752ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைமுறைக்கு கொண்டு வந்த போது11 நாட்கள் பிந்தியிருந்தது ஆகவே அவர்கள் 1752ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதிக்குப் பதிலாக14 ஆம் தேதி என்று என்று கணக்கு வைத்துக் கொண்டார்கள். அதாவது 11தேதிகளைக் காலண்டரிலிருந்து அதிகமாகக் கிழித்துக் கொண்டார்கள். இதுவே ஆங்கில வருடக் கணக்கு முறையில் ஏற்பட்ட மாற்றங்களாகும். கிபி 2092-ஆம் ஆண்டில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்."

இந்தப் பிசுறுகள் எல்லாம் இல்லாமல் 5120 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெளிவாக கணிக்கப் பட்ட நமது தமிழ்ஆண்டு கணக்கு முறையைப் பெருமையோடு பின்பற்றுவோம்!

இன்றைக்கு எப்படி ஆங்கிலம் எல்லை கடந்து எல்லா பக்கமும் வியாபித்து இருக்கிறதோ

அப்படி

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தமிழும் தமிழர் வணிகத் தொடர்பு கொண்டிருந்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வியாபித்து இருந்தது.

எண்கள், கிழமைகள், மொழி இலக்கணங்கள், கோள்கள், கடல் பயணங்கள், நாள் மாத பருவ ஆண்டு கணக்குகள், நம்பிக்கைகள், கடவுள்- இறை- தெய்வம் குறித்த கருதுகோள்கள், என்பனவெல்லாம் உலகினர்களுக்கு-தமிழர் வழங்கிய கொடையே.

 

இந்தப் பட்டியலில் இருக்கிற பனிரெண்டு தமிழ் மாதங்களுக்கான நாள், நாழிகை. விநாழிகை, தற்பரை என்ற நுட்பமான கணக்கை மனதில் இருத்திக் கொள்ள முயலாமல், நாம் தமிழர் காலக்கணக்கையே தொலைத்து விட்டு மணிக்கட்டில் மாதங்களுக்கான நாளை கணக்குப் போடுகிற எளிய ஆங்கில முறையைப் பின்பற்றி வருகிறோம். என்பதுதானே உண்மை. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,357.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.