Show all

மெச்சிப் பாராட்டும் தமிழகம்! சோனியா அவர்களின் பேச்சை தமிழ்மண் மணத்தோடு மொழிபெயர்த்து அசத்தினார் பீட்டர் அல்போன்ஸ்

02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பேசியவற்றை சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து அசத்தினார் பீட்டர் அல்போன்ஸ். 

சென்னை ராயப்பேட்டை கிறித்து இளைஞர் சங்கத் திடலில் நேற்று இரவு நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ஆங்கிலத்தில் பேசியதை மொழிபெயர்க்க மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் ஆகியோர் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டு அமர்ந்த நிலையில், அதன் பிறகு ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தமிழில் மொழிபெயர்த்து தெரிவித்தார். ஆனால் அவரது மொழிபெயர்ப்பு ஓரளவுக்கு இருந்ததே தவிர, மெச்சும்படியாக இல்லை. ராகுல் காந்தியின் ஆங்கிலச் சொற்களை முழுமையாகவும் திருநாவுக்கரசர் மொழிபெயர்க்கவில்லை. சில வரிகளை அவர் விட்டுவிட்டு தமிழில் தெரிவித்தார். சில வரிகளுக்கு பொருளே மாறிப்போயிருந்தது. 

இறுதியாக சோனியாகாந்தி உரையாற்றும்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்ப்பை மொழிபெயர்ப்பு என்று கூறிவிட முடியாத அளவுக்கு சோனியாவே தமிழில் புலமையோடு பேசுகிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. சுருக்கமாக சொல்லப்போனால் மொழிமாற்றத் திரைப்படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் மண்ணின் கலாச்சாரத்தோடு இணைந்த சொந்த மொழியில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல இருந்தது இந்த மொழிபெயர்ப்பு. 

மேலும் பீட்டர் அல்போன்ஸ், வெண்கல குரலும் இந்த மொழிபெயர்ப்புக்கு மேலும் மெருகூட்டியது. திருநாவுக்கரசர் மொழிபெயர்த்தபோது பேசுவதற்கு திணறினார். சில இடங்களில் சோனியா காந்தியே அதை சுட்டிக்காட்டி ஸ்டாலினிடம் சிரித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் பீட்டர் அல்போன்ஸ், சோனியா காந்திக்கு மிகச்சிறப்பாக மொழிபெயர்ப்பை செய்து அவரது கருத்துக்களை மிகச்சரியாக தமிழக மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தார். 

தமிழகத்தில், இனிமேல் அனைத்து மேடைகளிலும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் பேச்சுக்களை பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்த்து பேசினால், அக்கட்சிக்கு குறிப்பிட்ட விழுக்காடு வாக்குகள் உயரக்கூடும் என்று பெருமிதத்தோடு சொல்கிறார்கள் கதர் சட்டைக்காரர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,004.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.