Show all

புரியும் மொழியில் பேசிக்கொள்ளுங்கள்! தென்னகத் தொடர்வண்டித் துறையின் சிறிய பின்வாங்கல். போதாது; நிறைய மாற்றம் தேவை.

காலையில் தமிழில் பேசிக் கொள்ள விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப் பட்டது. நடுவண் அரசின் நிருவாகத்தில் இருக்கும் தென்னகத் தொடர்வண்டித்துறை வடவர்மயமானதின் உச்சமாக தமிழில் பேசத்தடை விதிப்பதும், விலக்கிக் கொள்வதும் போதாது. தென்னகத் தொடர்வண்டித் துறையின் தமிழக கோட்டம் முழுவதும் தமிழில் இயங்க வேண்டும்.

31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொடர்வண்டித் துறை அதிகாரிகள், தங்களுக்கு புரியும் மொழியில் தகவல் தொடர்பை மேற்கொள்ளலாம் என தமிழகத் தொடர்வண்டித் துறை, ஏற்கெனவே வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொண்டிருக்கிறது. 

தொடர்வண்டி கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும் என தென்னக தொடர்வண்டித்துறையின் சென்னைக் கோட்டம் சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. 

நடுவண் அரசின் நிருவாகத்தில் இருக்கிறது என்பதற்காக, தமிழ்நாட்டில் தமிழ் மொழியைத் தவிர்க்கச் சொல்கிறதா தென்னக தொடர்வண்டித்துறை என பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன. 

அதேபோல், தொடர்வண்டித் துறையின் பணிநியமனக் கொள்கையால்தான் இந்தநிலை ஏற்பட்டது என்றும், தென்னக தொடர்வண்டித் துறையில் பணிபுரிய வருபவர்களுக்கு தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என பணிநியமனக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனவும் டி.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் வலியுறுத்தியது. 

அதேபோல், இந்த விவகாரத்துக்கு தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தன. திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் தமிழ் பேசக் கூடாது, ஹிந்தி பேசு என்பது மொழித் திணிப்பு மட்டுமல்ல, மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு என்று கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதேபோல், இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் நடுவண் அமைச்சரும் திமுக பாராளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் தென்னக தொடர்வண்டித் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். கனிமொழி, வைரமுத்து உள்ளிட்டோரும் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.

டி.ஆர்.எம்.யூவின் செயல் தலைவர் இளங்கோவன் அதேபோல், தென்னக தொடர்வண்டித்துறையின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்னக தொடர்வண்டித் துறை  அதிகாரிகள், சுற்றறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தனர். அதன்படி, ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து டி.ஆர்.எம்.யூவின் செயல் தலைவர் இளங்கோவன், தொடர்வண்டித்துறையின் இந்த நடவடிக்கை மட்டும் போதாது. நிலைய மேலாளர், பயணச்சீட்டு பரிசோதகர்கள், பயணச்சீட்டு வழங்குமிடத்தில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட மக்களோடு தொடர்பில் இருக்கும் தொடர்வண்டித் துறை பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ் மொழிப் பயிற்சி அளிக்க வேண்டும். திருச்சியில் உள்ள தொடர்வண்டி பயிற்சி மையத்தில் பணியாளர்களுக்கு ஹிந்தி மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அந்தப் பயிற்சி மையத்தில் தமிழ் மொழி தெரியாத தொடர்வண்டித்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்குத் தமிழ் மொழியும் பயிற்றுவிக்க வேண்டும் என்றார். 

இந்த நிலையில், தொடர்வண்டித்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் நிலைய அதிகாரிகள் இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு ஆங்கிலம், ஹிந்தி மொழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை தென்னக தொடர்வண்டித்துறை மாற்றியிருக்கிறது. அதில், அதிகாரிகள் குழப்பம் இல்லாமல் புரியும் மொழியில் பேசிக்கொள்ளலாம் என மாற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,183.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.