Show all

சிறு குறு விவசாயிகள் பெற்றுள்ள கடன், பயிர்க் கடன்கள் தள்ளுபடி

ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள கடன், பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வைத்திருக்கும் சிறு விவசாயிகளும், 2.5 ஏக்கர் வரை வைத்திருக்கும் குறு விவசாயிகளும் கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள்.

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப் பிரிவுகளின்படி, விசாரணை, முறைகேடுகள், குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்கொள்வோர் பயன் பெற முடியாது.

பினாமி பெயரில் கடன் பெற்றவர்கள், போலியான, ஜோடிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது.

மார்ச் 31-ஆம் தேதிப்படி கணக்கீடு செய்யப்பட்டு, அதற்கு முன்பாக வாங்கப்பட்டுள்ள கடன்கள், வட்டி, அபராத வட்டி உள்ளிட்ட அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். அரசின் வேறு ஏதேனும் மானியம் போன்ற திட்டங்களால் பயிர்க் கடன் தொகை குறைக்கப்படும் நிலையில், மீதமுள்ள தொகைக்கு மட்டுமே தள்ளுபடிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நகைகளை அடமானமாக வைத்து பயிர்க் கடன் பெற்றிருந்தாலும் தள்ளுபடியாகும். ஆனால், பயிர் சாகுபடி இல்லாமல் வேறு வகையில் கடன் வாங்கப்பட்டிருந்தால் தள்ளுபடி செய்யப்படாது.

தள்ளுபடி சலுகை பெற்ற விவசாயிக்கு கடன் பாக்கியில்லை என்ற சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தள்ளுபடி செய்ததற்காக அளிக்கப்படும் கடிதத்தில், கடன் எண்ணும், தள்ளுபடி செய்யப்பட்ட தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 

தள்ளுபடி செய்யப்பட்டவற்றை வசூல் செய்வதற்கான எந்த நடவடிக்கையிலும் கூட்டுறவுச் சங்கங்கள் ஈடுபடாது. கடனுக்காக பெறப்பட்ட அசல் நில ஆவணங்கள், நகைகள் உள்ளிட்டவை திருப்பி அளிக்கப்படும்.

தள்ளுபடி செய்யப்பட்டோரின் பெயர், கடன் எண் உள்ளிட்ட விவரங்கள் கூட்டுறவு சங்கத்தின் தகவல் பலகையிலும், ஊராட்சி அலுவலகத்திலும், கிராம நிர்வாக அலுவலகத்திலும் தகவல் வெளியிடப்படும்.

வெளியிடப்பட்ட ஒரு வாரத்துக்குள் ஏதேனும் ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக மண்டல இணை பதிவாளர் ஒரு குழுவை அமைத்து அது குறித்து விசாரிக்க உத்தரவிடுவார். இதையடுத்து, இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படும்.

தள்ளுபடி சலுகை பெற்றவர்கள் புதிதாக விவசாயக் கடனும் பெறலாம்.

மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கிராமப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை, கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருந்து நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்களாக மாற்றப்பட்டவை ஆகியவற்றில் இருந்து வழங்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர, நீண்ட கால கடன்கள் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.