Show all

சிறு, குறு விவசாயிகளும் காதலர் நாளுக்காக ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

காதலர் நாளுக்காக ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது .

 

காதலர் நாளில் பரஸ்பரம் காதலர் மத்தியில் ரோஜாக்களை பரிமாறிக் கொள்வது நடைமுறை இயல்பாக உள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் காதலர் நாளில்; ரோஜாக்களுக்கு கடும் மவுசு நிலவுவதால், ரோஜா உற்பத்தி விவசாயிகளுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருகிறது.

 

அதிலும் குறிப்பாக ஒசூர் பகுதிகளில் விளைவிக்கப்படும் ரோஜாக்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. இதில் சிவப்பு ரோஜா மலர்களே அனைவராலும் விரும்பப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் மண் வளம் காரணமாக அதிக அளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

 

தாஜ்மஹால், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்கால, ரெட்ரோஸ், தாஜ்மஹால், நொப்ளஸ் உள்பட 45 வகையான சிவப்பு ரோஜா மலர்கள் ஒசூர், தளி பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.

 

ஆண்டுதோறும் காதலர் நாளில் மட்டும் ஒசூரில் இருந்து ஒரு கோடி ரோஜாக்கள் ஜெர்மனி, இத்தாலி, வளைகுடா நாடுகள், பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஹாலாந்து, நெதர்லாந்து, கென்யா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 

இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்தே வெளிநாடுகளுக்கு ரோஜாக்களை  ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமடைந்து வருகிறது. பெரு நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ரோஜாக்களை ஏற்றுமதி செய்வது வழக்கம்.

 

நிகழாண்டு சிறு, குறு விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

தளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறு மற்றும் குறு விவசாயிகள் சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் பசுமைக்குடில் அமைத்து குறைந்த செலவில் ரோஜா மலர்களை சாகுபடி செய்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.