Show all

அமைதிப் படுத்திய காவல் துறையினர்! அஞ்சல் நிலையம் முன் சாலையில் அமர்ந்து டிராபிக் ராமசாமி போராட்டம்; சோனியா பதாகை அகற்ற

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொள்கை அடிப்படையில்லாத போராட்டங்களுக்குச் சொந்தக்காரர் டிராபிக் ராமசாமி. சில நேரங்களில் அவரின் போராட்டங்களில் நியாயம் இருப்பதாகத் தோன்றும். சில நேரங்களில் சட்டத்தின் இடமே அவர் குமிழ் (பல்ப்) வாங்குவது உண்டு. சில நேரங்களில் இங்கிதம் இல்லாத மனிதர் என்று பொது மக்களே அவர் போராட்டங்களில் கசந்து போவதும் உண்டு. இன்றைக்கு அப்படித்தான் ஒரு நிகழ்வு நடந்து போனது.

சென்னை, பரங்கிமலையில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதாகையை அகற்றக் கோரி டிராபிக் ராமசாமி போராடியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. 

கருணாநிதி அவர்களின் முழு உருவச்சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வருகை தந்து உள்ளனர். அவர்களை வரவேற்று விமானநிலையத்தில் இருந்து கத்திபாரா பாலம் வரை காங்கிரஸ் கட்சியினர் காவல்துறை அனுமதியுடன் பதாகைகள் வைத்துள்ளனர்.  அனுமதி பெற்றே பதாகை வைத்ததாக காவலர்கள் கூறியும் அதை அகற்ற கோரி டிராபிக் ராமசாமி இன்று போராட்டம் நடத்தினார்.

பரங்கிமலை அஞ்சல் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், ஆலந்தூர் பகுதி செயலாளர் சீதாபதி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பரங்கிமலை காவல் துறை உதவி ஆணையர் கோவிந்த ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்தனர். காவல்துறையில் அனுமதி பெற்று பதாகை வைத்ததை உறுதிப் படுத்தி டிராபிக் ராமசாமியை போராட்டத்தைக் கைவிடுமாறு காவல் துறையினர் அமைதிப் படுத்தி அவரை வீட்டுக்கு அனுப்பினர். பொதுமக்கள் காவல்துறைக்கு ஆதரவாக டிராபிக் ராமசாமியை இங்கிதம் இல்லாத மனிதர் என்று நொந்து கொண்டனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,003.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.