Show all

சீமான் மகிழ்ச்சி! ‘மக்கள் பிரச்சனை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும்’

‘மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

27,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: “காந்தியைக் கோட்சே சுட்டது சரிதான் எனச் சிலர் பேசிக் கொண்டிருக்கிற போது காங்கிரஸ் கட்சி ஏன் தட்டிக் கேட்காமல் இருக்கிறது? ஆனால்  ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்று முழு தண்டனையையும் அனுபவித்து விட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே வருவதில்; உள்ள அரசியல் என்ன என்பதுதான் என் கேள்வி. இதை தற்போது திடீரென்று நான் கூறவில்லை கடந்த இருபத்தி ஐந்து ஆண்டு காலமாக வெளிப்படுத்தி வருகிற கருத்துதான் என்கிறார் சீமான்.

மேலும் கூறுகையில், மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று, சீமானின் வீட்டுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் கைதுசெய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. இல்லை... காங்கிரஸ் கட்சிக்காரர்கள் முற்றுகையிடுவார்கள் என்பதற்காகத்தான் காவல்துறை பாதுகாப்பு, கைது எல்லாம் இல்லை என்கிறது நாம் தமிழர் கட்சித் தரப்பு. 
ஆனால் சீமான்- நான் நாங்குநேரி தேர்தல் கருத்துப்பரப்புதலுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். காங்கிரஸ் எனது வீட்டை முற்றுகையிட இருப்பதாக வரும் செய்திகள் குறித்தும் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை முற்றுகையிடுவதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். எந்த மக்கள் பிரச்னைக்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும்.

'காந்தியை கோட்சே சுட்டது சரிதான். ஆனால், கொஞ்சம் தாமதமாகச் சுட்டுவிட்டார்” எனத் தொடர்ந்து பாஜகவினர் பேசியபோதும், காந்தியின் உருவப்படத்தை பெண் சாமியார் ஒருவர் நிற்கவைத்து சுடும்போதும், காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என வினாத்தாள் தயார் செய்தபோதும் அமைதியாக இருந்த காங்கிரஸ்காரர்கள், தண்டனை முழுமையாக அனுபவித்து விட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேருக்காக நான் பேசும்போது மட்டும் கொந்தளிப்பது ஏன்? 
விடுதலைப்புலிகளை மொத்தமாக அழித்துவிட்டோம் எனச் சொல்லிவிட்டு, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தடைவிதிப்பது ஏன்? இதன் உள்நோக்கம் என்ன?

எது தேசத் துரோகம்? காவிரியில் நதிநீர் வாங்கித் தர முடியாத கட்சிக்கு தேச ஒற்றுமை குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது? பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகாவிலிருந்து அடித்து விரட்டப்பட்டபோது, தேச ஒற்றுமை பேசுபவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில், தமிழ்ப் பாடல் ஒலித்த மண்டபம் ஒன்றுக்குள் நுழைந்து கன்னடர்கள் அடித்து நொறுக்கினார்கள்... தேச ஒற்றுமையைப் பேசும் காங்கிரஸ்காரர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தேசத் துரோக வழக்கு ஒன்றும் எனக்குப் புதிதல்ல.

இடைத்தேர்தல் என்றாலே பண விளையாட்டுதான். யார் அதிகமாகப் பணத்தைக் கொடுக்கிறார்களோ, அவர்களே அதிக வாக்குகளை அறுவடை செய்கிறார்கள். வழக்கம்போல தேர்தல் ஆணையமும் தூங்குகிறது.

மாற்று அரசியலை, புரட்சிகர அரசியலை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சி அதைச் செய்யமுடியாது. நல்ல கருத்துகளை விதைக்கிறோம். மாற்று அரசியலை நோக்கி, ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்து வருகிறோம். தொடர்ச்சியாகக் களத்தில் நிற்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் அதிகமாக வாக்குகள் வாங்கிக்கொண்டுதான் வருகிறோம். அந்த உற்சாகத்தில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கண்டிப்பாக ஒருநாள் மாறும். நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்கிறார் சீமான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,305.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.