Show all

தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று அந்த எழுவர்! மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது இறுதிநிலை

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச அறங்கூற்று மன்றத் தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கினார். 

இருப்பினும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் எழுவர் விடுதலை தொடர்பாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நடவடிக்கையே தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. 

ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து பலமாதங்களாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

அதனால் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகம் உட்பட உலக நாடுகளில் உள்ள பல தமிழர்கள் அஞ்சல் மூலமாக ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தனர். மேலும் மிதிவண்டிப் பயணம், அரசியல் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்தன. இருந்தும், ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் விளக்கமும் தரவில்லை. 

இந்நிலையில்தான் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேச வேண்டும் என கூடுதல் காவல்துறை இயக்குநருக்குக் அஞ்சல் எழுதியுள்ளார் அந்த எழுவர்களில் ஒருவரான ராபர்ட் பயஸ். 

ராபர்ட் தன் கைப்பட எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், எனது குழந்தை பாதுகாப்புடன் பிறந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கருவுற்றிருந்த மனைவியுடன் உள்நாட்டுப் போர் நடந்த இலங்கையிலிருந்து 29ஆண்டுகளுக்கு முன்னம் இந்தியாவுக்கு வந்தேன். அடுத்த ஆண்டில் திருப்பெரும்புதூரில் நடந்த குண்டு வெடிப்பு எனது வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. 

உச்சஅறங்கூற்று மன்ற மூன்று அறங்கூற்றுவர்கள் அமர்வு அரசியல் சாசன உறுப்பு 161 கீழ் மாநில அரசு விடுதலை குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூடி எனக்கும் ஏனைய அனைவருக்கும் விடுதலைக்கான பரிந்துரை வழங்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. 

ஏற்கெனவே நான்கு மாதங்கள் முடிந்த பின்னரும் இது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது நான்கு மாத துன்பமோ அல்லது நான்கு ஆண்டுகள் துன்பமோ இல்லை. ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நியாயம் மறுக்கப்பட்டவர்களின் துன்பம். விடுதலையைத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் விவரிக்க முடியாத மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கிறேன். சிறையில் இருந்த கால கட்டத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். நோய் வாய்ப்பட்டிருக்கும் என் தாயைப் பராமரிக்க இயலாத நிலையில் வாழ்கிறேன். என் மனைவியும் மகனும் தொலை தூரத்தில் அநாதைகளைப் போல் வாழ்கின்றனர். 

ஆகையால்தான் கடந்த ஆண்டு கருணைக் கொலை வேண்டி தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன். இதுபோல் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் தொடர்ந்து வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, எனது விடுதலைக் குறித்து உலகத்தார்க்குச் சிலவற்றை சொல்ல விரும்புவதால் செய்தி ஊடகங்களைச் சந்தித்து பேச அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு எழுதியுள்ளார்

காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள் பதினாறு ஆண்டுகளில் விடுவிக்கப் பட்டார்கள். வழக்கும் வெளிப்படையாக நடந்தது. காந்தியைச் சுட்டவர்களும் விடுதலையான பின்பும் கூட நான் ஏன் காந்தியைச் சுட்டேன் என்று நூல் எழுதினார்.

இந்த எழுவர் உண்மையிலேயே குற்றவாளிகளா? என்று பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாதபடி ராஜிவ் காந்தி கொலை வழக்கு மர்மமாக முடிக்கப்பட்;டது. இவர்கள் எழுவருமே தொடக்கத்திலிருந்து தங்களுக்கு ராஜிவ் கொலையில் தொடர்பில்லையென்றே பதிவு செய்து வருகிறார்கள். வழக்கு அவர்கள் குற்றவாளிகள் என்று முடிக்கப் பட்டு விட்டதால், ஊடகங்கள் கூட அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள் என்று பதிவு செய்ய முடிகிறதேயெழிய அவர்கள் மறுப்புகளை ஆய்வு செய்யும் நிலையிலிருந்து தவறவேண்டியுள்ளது.

அவர்கள் விடுதலையை வேண்டும் அனைவருமே, அவர்கள் குற்றவாளிகள்யில்லைதானே என்ற தமது ஆதங்கத்தை மறைத்துக் கொண்டு, 28 ஆண்டுகள் ஆகிவிட்டனவே? அறங்கூற்று மன்றமும் விடுதலை செய்யலாம் என்ற சொல்லி விட்டதுதானே? தமிழக அரசும் விடுதலை செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டதுதானே? என்றெல்லாம் புழுங்க வேண்டியிருக்கிறது. 

தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று அந்த எழுவர்! மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது இறுதிநிலை. ஆனாலும் எழுவர் விடுதலையை வேண்டும் அனைவருக்கும்: சட்டம் குற்றவாளிகள் என்று சொல்லிவிட்டதால், நெருக்கடியான தர்மசங்கடம்தான் 

அவர்கள் குற்றவாளிகள் இல்லையாம். வெளிப்படையாக வழக்கு நடத்துங்கள் என்று, இன்னும் 28 ஆண்டுகள் காத்திருக்கவா முடியும்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,030.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.