Show all

கல்லூரி மாணவர் பேருந்து நிலையம் முன்பு பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை

 

     காதல் திருமணம் செய்த பொறியியற் கல்லூரி மாணவர் பேருந்து நிலையம் முன்பு பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற அவருடைய காதல் மனைவியையும் கொலையாளிகள் வெட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் சாவடி தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் சங்கர்(வயது 22). கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யாவை (19) காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் குமரலிங்கத்தில் குடியிருந்து வந்தனர்.

 

அதன்பின்னர் கவுசல்யா குமரலிங்கத்தில் உள்ள டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சங்கரும், கவுசல்யாவும் உடுமலைக்கு பேருந்தில் வந்தனர். பின்னர் பேருந்தை விட்டு இறங்கிய அவர்கள் பேருந்து நிலையம் முன்பு உள்ள வணிக வளாகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சங்கரையும், கவுசல்யாவையும் வெட்டுவதற்கு பாய்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் தப்பி ஓட முயன்றனர். அதற்குள் அவர்கள் சங்கரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சங்கரின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் பயங்கர வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வௌ;ளத்தில் கீழே சாய்ந்தார்.

 

கோலையாளிகளைத் தடுக்க முயன்ற கவுசல்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவரும் பலத்த காயமடைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்தப் பயங்கர சம்பவம் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை குலைநடுங்க செய்தது. காதல் தம்பதியை வெட்டி சாய்த்த கொலையாளிகள் எந்த பயமும் இல்லாமல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அரிவாளை தோளில் தொங்கவிட்டபடி தப்பிச்சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு ரத்த வௌ;ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சங்கர், கவுசல்யாவை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்தச் சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.