Show all

மீனவர் பிரச்சினையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது.

மீனவர் பிரச்சினையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது என இலங்கை அரசு கூறியிருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதால் அந்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தீர்மான விதாதத்திற்கு பதில் அளித்து பேசிய இலங்கையின் தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்துறை அமைச்சர் நிரோஷன் பெரேரா நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மீன்வளம் கட்டாயம் காக்கப்படும் என்றார்.

மீனவர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது அவசியம்  என்றாலும் இது தொடர்பாக இந்திய அரசு மற்றும் இந்திய மீன்பிடி நிறுவனங்கள் விதிக்கும் நிபந்தனைகளை இலங்கை ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினையில் அர்த்தமற்ற 6 பரிந்துரைகளை இந்தியா முன் வைத்திருப்பதாக இலங்கை மீன்வளத்துறை பொறுப்பை வகிக்கும் அமைசச்ர் திலீப் குறிப்பிட்டார்.

மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை இலங்கை அரசு நாட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

முன்னதாக பேசிய தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும் இலங்கை எதிர்கட்சி தலைவருமான சம்பந்தன் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கூட்டாக ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்காக இந்திய அரசு மற்றும் தமிழக அரசுடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.