Show all

ஜெயலலிதா இல்ல சோதனைக்கு வருந்த வேண்டியவர்கள் வருந்த வில்லையே சரத்

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் செயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது உரிமையிருந்தாலும், தவிர்த்திருக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ற வகையில் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

செயலலிதா மீதான குற்றங்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து முடித்த பிறகும், எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் இறந்த பிறகும், அவரது வீட்டில் சோதனை நடவடிக்கை என்பது, இந்திய அரசியல் வரலாற்றில் இது வரை இல்லாத நடைமுறை.

வருமான வரித்துறையினருக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது, சோதனை நடத்துவதற்கு தக்க காரணமும் இருக்கிறது. ஒரு சாதாரண மனிதன் இறந்த பிறகு அவரை பேச்சளவில் கூட இகழ மறுக்கும் சமூகத்தில், மாபெரும் தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட செயலலிதா இறந்து, முதலாமாண்டு நினைவு நாள் நெருங்கும் நேரத்தில், அவருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்ட செயலாகவே இந்த நள்ளிரவுச் சோதனை நடவடிக்கையைப் பார்க்கிறேன்.

கட்சி சார்ந்த தொண்டர்கள் மட்டுமல்லாது, மறைந்த செயலலிதாவை வெகுவாக நேசித்த தமிழக மக்களையும் இந்த நடவடிக்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவோ, அதன் அணிகளுள் ஒன்றின் சார்பாகவோ இக்கருத்தை நான் கூறவில்லை. இது நிச்சயம் தொண்டர்களிடமும், அவரை அன்போடு நேசித்த தமிழக மக்களிடமும், சிந்தையில் ஓடிக்கொண்டிருக்கும் வேதனை கலந்த எண்ணங்களின் வெளிப்பாடாகவே இருக்கும் என்ற அடிப்படையில், என் வருத்தத்தை வெளிப்படுத்துகிறேன். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என யாரும் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது.

தேசிய அளவில் மிகப் பெரிய புகழையும் பெருமையும் பெற்று, நீண்ட காலம் பொது வாழ்விலும், முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த தமிழக மாநிலத்தின் முதல்வராகவும் பணியாற்றிய தலைவர், பெரும்பான்மையான தமிழக மக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்த தலைவர் வாழ்ந்த இல்லத்தை இந்த முறையில் சோதனை நடத்தியிருப்பது, அவர் மேல் மதிப்பு கொண்டிருக்கும் மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது, என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • அதில் கூறியுள்ளார்.

காங்கிரஸ்- திமுகவை அடிமையாக நடத்துவது போல, பாஜகவிற்கு நல்ல அடிமையாக அதிமுக உருவாக்கத்தின் படிகட்டுகளே இவைகள். வடக்கின் செருப்பை வைத்து ஆட்சி நடத்தும் அடிமைகளான திமுகவும், அதிமுகவும் உள்ளவரை இது போன்ற காட்சிகளுக்கு தமிழகத்தில் முடிவேயில்லை சரத்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,610

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.