Show all

ரசாயனக் கலவையில் செய்யப்பட்ட 500 விநாயகர் சிலைகள் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பறிமுதல்

கோவையில் ரசாயன கலவையில் செய்யப்பட்ட 500 விநாயகர் சிலைகளை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரசாயன கலவை

விநாயகர் சதுர்த்திவிழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆறுகள் மற்றும் குளங்களில் கரைக்கப்படும்.

எனவே நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க, விநாயகர் சிலைகளைக் களிமண்ணில் தான் செய்ய வேண்டும். ரசாயன கலவையைப் பயன்படுத்தி செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ரசாயனக் கலவையை பயன்படுத்தி செய்துள்ள விநாயகர் சிலைகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப் பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியில் ரசாயன கலவையை பயன்படுத்தி செய்யப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் சாலையோர கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்குக்கு புகார் சென்றது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கும் சிலைகள் அனைத்தும் ரசாயன கலவையைப் பயன்படுத்தி செய்தது தெரியவந்தது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த சிலைகளை பறிமுதல் செய்தனர்.

500 சிலைகள் பறிமுதல்

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘பூ மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரசாயன கலவையை பயன்படுத்தி செய்யப்பட்ட 500 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இந்தச் சிலைகள் அனைத்தும் ஒரு அடி உயரம் முதல் 2 அடி உயரம் கொண்டது ஆகும். தொடர்ந்து இதுபோன்ற சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.