Show all

சென்னையில் ஓடும் மின்சாரத் தொடர்வண்டியில் தீ விபத்து

சென்னையில் ஓடும் மின்சாரத் தொடர்வண்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆகூழ்வசமாக அதில் பயணம் செய்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

 

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி நேற்றிரவு 11.10 மணிக்கு மின்சாரத் தொடர்வண்டி புறப்பட்டது. கோட்டை ரெயில் நிலையம் வரும்போது 6-வது பெட்டியின் மேல் தீப்பொறி பறந்தது. பெட்டிக்குள் இருந்து புகை வெளியேறியது. இதைக் கண்டதும் பயணிகள் அலறினர். தொடர்வண்டி ஓடிக் கொண்டிருந்ததால் இறங்க முடியாமல் தவித்தனர்.

 

இந்த நிலையில் அந்த பெட்டி எரியத் தொடங்கியது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 

இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைமைச் செயலகம் மற்றும் உயர்நீதிமன்ற தீயணைப்பு நிலையத்தில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வண்டி அனுப்பப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் பெட்டி லேசாக சேதம் அடைந்தது.

 

இந்தச் சம்பவத்தால் கடற்கரை - தாம்பரம் பாதையில் செல்லும் அனைத்து தொடர்வண்டிகளும் ரத்து செய்யப்பட்டன. தகவல் அறிந்த தெற்கு தொடர்வண்டிதுறை சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். என்ஜின் ஓட்டுநர் மற்றும் கார்டு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது,

‘தொடர்வண்டியில் இருந்து உடனடியாக பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. மின் கசிவு இருந்ததாக கூறப்பட்டாலும், உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’

என்று தெரிவித்தார்.

 

இரவு 11.45 மணிக்கு மேல் மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. தீப்பிடித்த தொடர்வண்டி பெட்டி பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.