Show all

உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு! மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய மிதிவண்டியில் கருநாடக அரசின் முத்திரை எப்படி!

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அரசின் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமைதாங்கிய அந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அந்த மதிவண்டிகளில் கர்நாடக அரசின் முத்திரை இருந்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. தரமற்றவை எனக் கர்நாடக அரசு நிராகரித்த மிதிவண்டிகளைக் குறைந்தவிலைக்கு வாங்கி தமிழக அரசு, மாணவர்களுக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து, டிராபிக் ராமசாமி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் முறையிட்டார். அதில், கர்நாடக அரசு முத்திரையுடன் உள்ள மதிவண்டிகள் தரமற்றவையாக இருக்கின்றன. அவற்றின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல், வழங்கப்பட்ட மதிவண்டிகளைத் திரும்பப் பெறுவதுடன், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

இந்த மனு அறங்கூற்றுவர்கள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் ஆவணங்கள் இல்லாமல் ஊடகச் செய்திகளை மட்டுமே பதிகை செய்த மனுவை எப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, கூடுதல் ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்வதாக மனுதாரர் டிராபிக் ராமசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், கர்நாடக அரசு முத்திரையுடன் தமிழக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது எப்படி என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பிய அறங்கூற்றுவர்கள், இதைக்கூட உரிய முறையில் பார்க்கவில்லையா என்று கேட்டனர். கூடுதல் ஆவணங்களை மனுதாரர் பதிகை செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 கிழமைகளுக்கு அறங்கூற்றுவர்கள் ஒத்திவைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,992.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.