Show all

நிவாரண நிதிக்கு, அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமாத சம்பளம்

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோருக்காக அதிமுக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கலங்க வேண்டாம், அன்புசகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.  இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான மழை வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கின்ற பெரும்பணியில் எனது தலைமையிலான அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது. வரலாறு கண்டிராத வகையிலும், திடீரென்றும் ஏற்பட்ட அரிதினும் அரிதான இந்த மழையும்,வெள்ளப் பெருக்கும் தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கும் இழப்புகள் ஏராளம். நிவாரணப் பணிகளில் எல்லோரும் பங்கேற்கும் வகையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர் என்ற செய்தி பல இடங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. நிவாரணப் பணிகளில் தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியும், பாராட்டும். அதிமுக உடன்பிறப்புக்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கெல்லாம் இந்த மக்கள் துயர் துடைக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக இந்தப் பணியில் பங்குபெற்று ஆற்றி வரும் கடமைகளில் ஒன்றாக, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் எந்த நேரத்திலும் உங்களுடனேயே இருப்பேன்; கலங்காதீர்கள். என்னுடைய எண்ணம் முழுவதும் உங்களைப் பற்றியதாகவே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.