Show all

செஸ் விளையாடிய பின் படித்தால் பாடங்கள் மனதில் ஆழமாகப் பதியும் விஸ்வநாதன்ஆனந்த்

தினமும் ஒருமணி நேரம் செஸ் விளையாடினால் கணிதத்தில் சிறப்பாக செயல்படலாம் எனச் சொல்ல முடியாது. ஆனால், செஸ் விளையாடிய பின் படித்தால் பாடங்கள் மனதில் ஆழமாக பதியும் என சர்வதேச கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

மதுரை மகாத்மா பள்ளியில் என்ஐஐடி கணிதம் கற்றல் ஆய்வகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு ஆய்வகத்தைத் திறந்து வைத்த விஸ்வநாதன் ஆனந்த், பள்ளி மாணவர்களுடன் செஸ் விளையாடினார். செஸ் விளையாட்டில் கவனமாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு அவர் அறிவுரைகளை வழங்கி கலந்துரையாடினார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது:

படிக்கும் பருவத்தில் கல்வியுடன் ஏதாவது ஒரு விளையாட்டில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அது மூளைக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது. தினமும் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை செஸ் விளையாடினால் மனதுக்கு புத்துணர்வு கிடைக்கும். செஸ் விளையாடினால் கணிதத்தில் புலியாகலாம் எனச் சொல்ல முடியாது.

ஆனால் செஸ் விளையாடிய பின் படித்தால், படிக்கும் பாடங்கள் மனதில் ஆழமாகப் பதியும். மாணவர்கள் மத்தியில் இன்று செஸ் விளையாடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. விளையாட்டுத் துறையில் செஸ் போட்டிக்கு இன்று ஒரு நல்ல இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக செஸ் விளையாட்டு வளர்ச்சிக்குப் பள்ளிகள் செஸ் அகாடமிகளாக மாற முடியாது.

செஸ் விளையாட்டில் மாணவர்கள் சாதிக்க பள்ளிகளின் பங்களிப்பு மட்டும் இருந்தால் போதாது. தனிப்பட்ட முறையில் செஸ் விளையாடுபவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்தால் மட்டுமே சாதிக்க முடியும். கடின உழைப்பு, பயிற்சி இந்த இரண்டுமே வெற்றிக்கு முக்கியம். ஆன்லைனில் அமர்ந்தும் விளையாடலாம்.

காலத்துக்கு தகுந்தாற்போல வெற்றிக்காக வீரர்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். நானும் செஸ் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பலமுறை தவறுகளைச் செய்திருக்கிறேன். தொடர் பயிற்சியால்தான் என்னால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது. தமிழகத்தில் செஸ் விளையாட்டில் சிறந்த சீனியர், ஜூனியர் வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் உலக செஸ் அரங்கில் நல்ல நிலைக்கு வரும் வாய்ப்புள்ளது.

மாணவர்கள், இளைஞர்கள் இன்று செல்போன்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் படிப்பு, விளையாட்டு ஆர்வம் சிதறிவிடும். என்னுடன் எதிர்முனையில் அமர்ந்து விளையாடும் எல்லோரையும் என்னுடைய சிறந்த போட்டியாளராகத்தான் நினைப்பேன். அப்படி நினைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில், செஸ் போட்டிகளைப் பிரபலப்படுத்த பள்ளிகளில் செஸ் போட்டிகளை நடத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.