Show all

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் 8 அணிகளின் பெயர்கள் மற்றும் அணித்தலைவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் புதிததாக கட்டிடம் கட்ட பல்வேறு திட்டங்களுடன் புதிய நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். இதில் முதல் திட்டமாக ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது.

இக்கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கிறது. ஒவ்வொர் அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள்.

இந்த 8 அணிகளுக்கு தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களின் பெயர்களை சூட்டியிருக்கிறார்கள்.

1.மதுரை காலேஜ், 2.சென்னை சிங்கம்ஸ், 3.நெல்லை டிராகன்ஸ், 4.தஞ்சை வாரியர்ஸ், 5.திருச்சி டைகர்ஸ், 6.ராமநாடு ரைனோஸ், 7.கோவை கிங்ஸ் மற்றும் 8.சேலம் சீட்டாஸ் என்று

8அணிகளுக்கும் பெயரிட்டு இருக்கிறார்கள்.

இந்த 8 அணிகளுக்கும் அணித்தலைவர்களாக

சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

இதில் எந்த அணிக்கு யார் அணித்தலைவர் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

 

இக்கிரிக்கெட் போட்டியின் விளம்பர தூதர்களாக

அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினி, கமல், அமிதாப் பச்சன் மற்றும் சீரஞ்சிவி ஆகியோர் இக்கிரிக்கெட் போட்டியை துவக்கி வைக்க இருக்கிறார்கள்.

இக்கிரிக்கெட் போட்டியில் மொத்த உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. தொலைக்காட்சி உரிமை மற்றும் இதர உரிமைகளின் மூலமாக வரும் பணத்தை அப்படியே கட்டிட நிதிக்கு ஒதுக்க இருக்கிறார்கள். இக்கிரிக்கெட் போட்டியின் முழுமையான இறுதிவடிவம் ஏப்ரல் 3ம் தேதியன்று வெளியாக இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.