Show all

தமாகா கூட்டணி போராட்டம் மக்கள் நலக் கூட்டணியில் நிறைவடையுமா

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் தற்போது முதன்மையாக எழுப்பப்படும் கேள்வி. இதற்கான விடையைக் கண்டறிவதற்குள் ஜி.கே.வாசன் கடும் போராட்டத்தைச் சந்தித்துவிட்டார்.

 காங்கிரஸில் இருந்து பிரிந்து தமாகாவை தொடங்கியபோதே, தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே ஜி.கே.வாசனின் முடிவாக இருந்தது. இதை கருத்தில் கொண்டே தனது அரசியல் செயல்பாடுகளை வகுத்து வாசன் பணியாற்றி வந்தார். ஆனால், தமாகாவைச் சுமக்கத் தயாராக இல்லை என்று அதிமுக கூறிவிட்டது.

 அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும்கூட, அந்தக் கூட்டணியில் இடம் பெறுவதற்கு ஜி.கே.வாசன் பல முயற்சிகள் எடுத்துப் பார்த்தார். எனினும், எதுவும் கைகூடவில்லை.

அதிமுகவுடன் தமாகா பேச்சுவார்த்தை நடத்தி வந்த அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஒவ்வொரு கட்சியும் தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில், மக்கள் நலக் கூட்டணியுடன் தமாகா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

 தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி அமைந்தபோது தேமுதிகவுக்கு 124 தொகுதிகளும், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதில் தமாகா கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 24 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் கிடைத்ததும், தமாகாவைக் கை கழுவும் எண்ணத்துக்கு அதிமுக வந்தது.

இதனால், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், 7 தொகுதிகள்தான் தரப்படும் என்றெல்லாம் அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

 இதற்கிடையில், திமுகவும் தங்களைக் கூட்டணிக்கு அழைக்கிறது என்பதுபோல காட்ட வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

 காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்று திமுகவை தமாகா வலியுறுத்தியது. ஆனால், இதற்கு திமுக இணங்கவில்லை.

 இதைத் தொடர்ந்து, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மீண்டும் தீவிரமாக ஜி.கே.வாசன் முயற்சித்தார். ஆனால், அதிமுக தனது கதவை இறுக்கமாக மூடிவிட்டது.

 இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மீண்டும் தமாகாவுக்கு அழைப்பு விடுத்தனர். வாசன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். மக்கள் நலக் கூட்டணியை வெற்றி வாய்ப்பு உள்ள கூட்டணியாக அவர் பார்க்கவில்லை.

 மேலும், காங்கிரஸ் பகைத்துக் கொண்டு கட்சித் தொடங்கியுள்ள நிலையில், மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவருக்கு உள்ளது. அதனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டால் எந்த பிரச்னையும் இருக்காது என்றும் வாசன் கருதினார்.

     இதனால், வியாழக்கிழமை பாஜக தலைவர்களைச் சந்தித்து கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஜி.கே.வாசன் ஈடுபட்டார். இந்தத் தகவல் வெளியில் வராது என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனே தமாகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை வெளிப்படுத்திவிட்டார். இதைத் தொடர்ந்து, பாஜகவுடன் தமாகாவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று ஜி.கே.வாசனும் ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 பாஜகவுடன் ஜி.கே.வாசன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் அவர் எதிர்பார்த்தவை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தமாகாவின் முக்கிய நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், வேறு வழியில்லாமல் மக்கள் நலக் கூட்டணியையே நாட வேண்டிய கட்டாயம் வாசனுக்கு ஏற்பட்டுள்ளது.

     இதையடுத்து வைகோவைத் தொடர்பு கொண்டு வாசன் பேசினார். உடனே, வைகோவும் விஜயகாந்தை நேரில் சந்தித்து, வாசன் கூறியவற்றைத் தெரிவித்தார்.

 தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் தமாகாவுக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று வாசன் எதிர்பார்க்கிறார்.

 இந்தக் கூட்டணியில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 110 தொகுதிகளில் மதிமுகவுக்கு 32 தொகுதிகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 26 தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டது. தேமுதிகவின் 124 தொகுதிகளில் 24 தொகுதிகள் தமாகாவுக்கு என்று முடிவு எடுக்கப்பட்டது.

 தற்போது தமாகா 40 தொகுதிகள் வரை கேட்பதாலும், எஸ்டிபிஐ கட்சி கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் நலக் கூட்டணியினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

 தமாகாவுக்கு 30 தொகுதிகளில் இருந்து 35 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு சனிக்கிழமை (ஏப்.9) வெளியாகலாம் என்று தெரிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.