Show all

இந்த ஆண்டு போகிக் கொண்டாட்டத்தில் காற்று மாசு குறைந்தது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் திருவிழாவின் தொடக்கமாக காப்புக்கட்டும் போகித்திருநாளாக கொண்டாடப் படுகிறது. வீட்டை தூய்மைப் படுத்தி, தூய்மைப் படுத்தியதன் அடையாளமாக காப்புக்கட்டுதல் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகித் திருநாளைக் கொண்டாடி வந்துள்ளனர். 

சென்னை போன்ற பகுதிகளில் இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து போகியை கொண்டாடும் வழக்கம் ஏதோ காரணம் பற்றி பின்பற்றப் பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் போகித் திருநாள் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் அதிகாலையில் பழைய பொருட்களை சேகரித்து தங்கள் வீடுகளின் முன்பு எரித்தனர். 

ஆனாலும் காற்றை மாசுபடுத்தும் வகையில் போகியை கொண்டாடக் கூடாது என்பதில் பொதுமக்களும் கவனமாக இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, ஒருசில பொருட்கள் மற்றும் தேவையற்ற மட்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை கொண்டாடியதை காண முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிய அளவில் நெருப்பு மூட்டி போகியை கொண்டாடினர். 

இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள செய்தியில், கடந்த ஆண்டு போகி திருநாளுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு காற்று மாசு குறைந்து காணப்பட்டது. காற்று மாசு குறைந்ததற்கு காரணம் பொதுமக்களிடையே இருந்த விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் தான் என தெரிவிக்கப்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.