Show all

காவலர் மீட்டிய கவிதை! காலஇயந்திரத்தில், சங்ககால சமுகத்திற்கு நம்மை முன்னெடுத்துச் செல்வது போன்ற மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது பழந்தமிகத்தில், மன்னன் நெடுஞ்செழியன் கவிதை பாடியிருப்பார். மட்பாண்டக் கலைஞர் வெண்ணிக்குயத்தியார் கவிதை பாடியிருப்பார். தற்கால அவசர யுகத்தில் தமிழர்களுக்கு அதற்கான மகிழ்வான நேரம் இல்லாமல் போனது.

ஆனாலும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், காவல்துறையினருக்கு தகவல் தொடர்புக்கு வழங்க பட்டிருக்கும் கருவியில், கவிதை மீட்டி காவல் ஆய்வாளர் கணேசன் அசத்தியுள்ளார். 

சென்னை மாநகர காவல் துறையினர் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம்போல இரவு நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழகு தமிழில் கவிதை ஒன்று காவலர் தகவல் தொடர்பு கருவி வழியே வந்தது. காவலர்களின் பணிகளைப் பாராட்டியும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அந்தக் கவிதை இருந்தது. இதைக் கேட்டுக்கொண்டிருந்த இரவுப் பணி காவலர்களுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

பின்னர், காவலர்தகவல் கருவியில் தைரியமாக கவிதையை வாசித்தது யார் என்று விசாரித்ததில், சென்னை உயர் அறங்கூற்றுமன்ற காவல் ஆய்வாளர் கணேசன்தான் இந்த கவிதை படித்தவர் என்பது தெரியவந்தது. அன்றைய நாளில் இரவுப் பணியில் இருந்த துணை ஆணையர் ஜெயலட்சுமியும் இந்தக் கவிதையை கேட்டுள்ளார். கணேசன் கவிதை வசித்து முடித்ததும் தகவல்கருவி தொடர்பில் வந்த துணை ஆணையர், கணேசனை வெகுவாக பாராட்டினார்.

குடும்ப வாழ்வில் இனிமையை துறப்பாய், 

குழந்தை களின் மழலை மொழி மறந்துபோகும், 

மனையாளையும் துறந்து வாடுவாய், 

பாசம் கொண்ட உற்றார் உறவினர்களையும் மறப்பாய், 

பண்பான காவல் பணியின் கடமையை செய்தால் 

பலன் தானாக வருமடா. 

முறுக்கு மீசையும், மிடுக்கு நடையும் 

காவலனுக்கு மட்டுமே சிறப்படா. 

நீ உடுக்கும் உடையும், உறவாடும் முறையும் 

மக்களிடத்தில் உன் மாண்பை சொல்லும். 

மகராசன் நீ என்று 

மக்கள் உள்ளம் உன்னை போற்றும். 

செய்வதை திருந்த செய்யடா. 

உன் நல்ல செயலால் உன் வாழ்வும் 

உயரும் என்பது மெய்யடா, 

மக்களைக் காக்கும் காவலா, 

நீ மட்டுமே கடமை வீரனடா! 

என்பதுதான் அந்தக் கவிதை.

இந்நிலையில், கணேசனின் கவிதையும், அதற்கான துணை ஆணையரின் பாராட்டும், சமூக வலைதளங்களில் பரவி இருவருக்கும் குவியும் பாராட்டுக்கள், காலஇயந்திரத்தில், சங்ககால சமுகத்திற்கு நம்மை முன்னெடுத்துச் செல்வது போன்ற மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,985.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.