Show all

ஜல்லிக்கட்டைக் காண்பதற்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம்

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சுவிரட்டு ஆகியவை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தன.

இந்த போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியத்தினர் புகார் கூறினார்கள். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு இந்த போட்டிகள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குமாறு நடுவண் அரசை வற்புறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த கடந்த வௌ;ளிக்கிழமை நடுவண் அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள்.

நடுவண் அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வருகிற 15-ந் தேதி பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், மறுநாள் 16-ந் தேதி பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. 3 இடங்களிலும் காளைகளை அவிழ்த்துவிடும் வாடிவாசல், தடுப்புகள் அமைப்பது, பார்வையாளர்கள் உட்காருவதற்கு சவுக்கு கட்டைகளாலான ‘காலரி’கள், பந்தல்கள் அமைப்பது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார்கள். 3 இடங்களிலும் கலந்து கொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளன.

ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா துறையினர் செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்து இதை காண்பதற்கு ஜெர்மனி, கனடா, பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் மதுரை சுற்றுலா அலுவலகத்தில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 65-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன் ஏற்பாடு பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களுக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடம், பார்வையாளர் பகுதி, மருத்துவ முதலுதவி வசதி, ஆம்புலன்சு, தீயணைப்பு வாகனங்கள், பார்வையாளர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தப்படும் இடங்களைப் பார்த்தார்.

அவருடன் மாநகராட்சி கமிஷனர் கதிரவன், மாவட்ட வருவாய் அதிகாரி வேலுச்சாமி, கால்நடைத் துறை இணை இயக்குனர் கோபிநாத், பொதுப்பணித்துறை செயற்பொறிஞர், மக்கள்தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா மற்றும் அதிகாரிகள் சென்று இருந்தனர்.

சட்டவிதிகளின் வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும். 2½ வயதிற்கு மேற்பட்ட காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட வேண்டும். மாடுபிடி வீரர்கள் 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

பார்வையாளர்கள் பகுதியில் மாடு அவிழ்த்து விட்டு ஓடக்கூடிய குறிப்பிட்ட இடம் வரை காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் காயம் எதுவும் ஏற்படாத வகையில் ஒன்றரை அடி உயரத்துக்கு தென்னை நார்கள் குவிக்கப்பட வேண்டும். 3 அடி ஆழத்திற்கு குழிதோண்டி அதில் உயரமான சவுக்கு கட்டைகளை ஊன்ற வேண்டும் என்பன போன்ற பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.