Show all

பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த கட்ட சுற்றுப் பயணம் ஈரானில்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 22, 23 ஆகிய நாட்களில் ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக ஈரான் விளங்குகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 2 மடங்காக அதிகரிக்க இந்தியா விரும்புகிறது. ஈரான் நாட்டின் சாபார் துறைமுகத்தை மேம்படுத்தவும், மிகப்பெரிய எண்ணெய் வயல் ஒன்றை மேம்படுத்துவதற்கான உரிமை பெறவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியின் அழைப்பை ஏற்று மே 22, 23 ஆகிய நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி ஈரானில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது ஈரான் அதிபரைச் சந்திக்கும் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுகிறார்.

இந்தியா - ஈரான் இடையிலான பிராந்திய தொடர்பு, உள்கட்டமைப்பு, எரிசக்தி துறை மேம்பாடு, இருதரப்பு வர்த்தகம், இரு நாட்டு மக்கள் இடையிலான தொடர்புகள், பிராந்திய அமைதி ஆகியவை இந்த ஆலோசனையில் முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு அந்நாட்டுடன் தூதரக மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்த ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி ஈரானில் பயணம் செய்கிறார். பிரதமரின் பயணத்தையொட்டி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

    

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.