Show all

அப்பா சாமிங்களா, தயவு செஞ்சு செல்பேசியிலே பேசிகிட்டே வண்டி ஓட்டாதிங்க அப்பா! 35 விழுக்காடு விபத்துகள் அதனாலாம்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செல்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதால் 35 விழுக்காடு விபத்துகள் ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு கிழமை விழா இன்று வரை ஒரு கிழமை காலமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அமிர்த வித்யாலயா பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு, சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அவசர நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென செயல்முறைவிளக்கங்கள் அளிக்கப்பட்டன.

சாலைகளில் எப்போது பயணித்தாலும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி நடிகர் மயில்சாமி பேசினார். சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பேச்சு பேட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிறிதரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர், அவர் பேசும்போது, 'மாணவர்கள் பள்ளியில் படிக்கும்போதே, சாலைவிதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும், சாலைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குறியீடுகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம், காரில் பயணம் செய்யும்போது இருக்கைப் பட்டை அணிய வேண்டும். செல்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதன் மூலம் 35 விழுக்காடு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, எந்த வாகனங்களை ஓட்டிச் சென்றாலும் செல்பேசியில் பேசிக்கொண்டே ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வி.அருணாச்சலம், பள்ளி தாளாளர் சுபாசினி மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.