Show all

நமது மாணவர்களுக்குத் தேவை; தரமான கல்வி! ஆங்கிலேயர் வீட்டு எடுபிடிகளா நமது மாணவர்கள்? ஆங்கிலம் தெரிந்தால் போதும்; பேசுவர் தேவையிருந்தால்

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்ய கோரியும், ஆங்கில மொழியில் மழலையர் வகுப்புகளை தமிழக அரசு தொடங்கக் கோரியும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு பள்ளிகளும், 12 ஆயிரத்து 419 தனியார் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்காக ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடியை அரசு செலவு செய்கிறது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கில பேச்சுத் திறன் இல்லாத காரணத்தால், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர முடியாத நிலையில் உள்ளனர். நல்ல வேலை வாய்ப்புகளையும் அவர்களால் பெற முடியவில்லை. எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தவும், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மழலையர் வகுப்புகள் தொடங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்பாவு தன் வழக்கில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த அறங்கூற்றுவர்கள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் தமிழக அரசு விரிவான பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு அறங்கூற்றுவர்கள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர்கள் கூறியதாவது:

தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது? அந்த மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகும் ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கின்றனர்.

கேரளா, ஆந்திர மாநிலங்களில் தாய் மொழியில் படிக்கும் மாணவர்கள், ஆங்கிலத்திலும் நன்றாக பேசுகின்றனர். போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெறுகின்றனர். அந்த நிலை தமிழகத்தில் ஏன் இல்லை?

இந்த வழக்கை தொடர்ந்தவர் திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்றஉறுப்பினர் என்பதால், இதை அரசியல் ரீதியாக தமிழக அரசு பார்க்கக்கூடாது.

அண்மையில் குடிமையியல் அறங்கூற்றுவர் தேர்வுக்கான நேர்முகத் தேர்வை நடத்தினோம். அப்போது, தமிழில் பதில் சொல்லட்டுமா? என்று பலர் கேட்டனர். இதற்கு காரணம் ஆங்கில புலமை இல்லாதது தான் என்றனர். இவ்வாறு அறங்கூற்றுவர்கள் கூறினார்கள்.

இந்த வழக்கை 23நாட்கள் தள்ளி வைக்கிறோம். தமிழக அரசு விரிவான பதில் மனுவை பதிகை செய்ய வேண்டும் என்றும் அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். 

தமிழக அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியும் இருக்கிறது. ஆங்கில வழிக் கல்வியும் இருக்கிறது. தமிழ் வழிக் கல்வியிலும், ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்கிறது. தமிழ் வழிக் கல்வியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். இத்தனைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கு குறைவாக சம்பளம் வாங்குகின்றனர் தனியார் பள்ளி ஆசிரியர்கள். ஆக மாணவர்களிடம் தகுதிக் குறைபாடு எவ்வாறு வருகிறது? பாடத்திட்டத்திலும் குறையில்லை. மாணவர்களிடம் ஆற்றல் குறைபாடு பிறவியிலேயே வருவதில்லை. ஆசிரியர்கள்தாம் நூறு விழுக்காடும் பிழையானவர்கள். அந்த ஆசிரியர்களை களையெடுக்காத கல்வித்துறை குறைபாடு    உடையது. கல்வித்துறையை கண்டிக்காத கல்வி அமைச்சர் பிழையானவர். கல்வி அமைச்சரைக் கண்டு கொள்ளாத அரசு பிழையானது. 

மாணவர்களுக்கு, ஆங்கிலப் பேச்சு பயிற்சியும் இந்த ஆசிரியர்கள்தாம் நடத்த வேண்டும். பள்ளியிலே மழலையர் வகுப்பு தொடங்கினால் இதே ஆசிரியர்கள் தாம் பாடம் எடுப்பார்கள். சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால், அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்தப் பாடமும் சரியாக நடத்தப் படுவதில்லை என்பதுதாம் உண்மை. பாடத்தில் திறன் இருந்தால் எந்தப் போட்டித் தேர்வையும் எதிர் கொள்ள முடியும். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி எல்லாம், ஆங்கிலேயர் வீட்டு எடுபிடி வேலையாட்களுக்குதாம் தேவை. 

இந்த வழக்கே அடிப்படையற்றது என்பதை தமிழக அரசு தமது பதில் மனுவில் தெளிவாக விளக்கி ஆவன செய்ய வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,969. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.