Show all

நடத்துநர் கிளை நுழைவு வாயிலில் தீக்குளிக்க முயற்சி

சேலம் அரசு போக்குவரத்துக்கழக, ஜான்சன்பேட்டை கிளையில், சென்னை - சேலம் வழித்தடப் பேருந்தின், வசூல்தொகையை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், நடத்துநர் கிளை நுழைவு வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தார்.

நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சாமிநாதன், 57. இவர், சேலம் அரசு போக்குவரத்துக்கழக, ஜான்சன்பேட்டை கிளையில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், சேலம் - சென்னை வழித்தட பேருந்தில் பணியாற்றி உள்ளார்.

இந்த வழித்தடப் பேருந்துக்கு வசூல் இலக்காக அதிகாரிகள், 13 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளனர்.

அதே நேரத்தில், பேருந்தை இரண்டு மார்க்கத்திலும், சேர்த்து அனைத்து ஊர்களுக்குள்ளும் சென்று வருவதோடு, 14 மணி நேரத்துக்குள் இயக்க வேண்டும் என, அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனனர்.

சாமிநாதன் பணியாற்றிய பேருந்து, சேலம் - சென்னை இரண்டு மார்க்கத்திலும், வசூலுக்காக அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்ததால், 18 மணி நேரம் இயக்கப்பட்டு, 8,672 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டி உள்ளது. பள்ளிகளுக்கான இறுதித் தேர்வு நடந்து வருவதால், பேருந்தில் கூட்டம் இல்லை.

நேற்று காலை, பேருந்து சேலம், புது பேருந்து நிலையத்திற்கு வந்த பின், வசூல் தொகையை வாங்க முடியாது என, தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த சாமிநாதன், கிளை மேலாளர் கலைவாணன் உட்பட அதிகாரிகள் பலரிடம் முறையிட்டும் பயன் இல்லை. மனம் உடைந்து, ஜான்சன்பேட்டை கிளை நுழைவு வாயிலில், பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதை அறிந்த காவலர், சாமிநாதனைத் தடுத்து நிறுத்தி, அவர் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி வைத்துக் கொண்டார். தீக்குளிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல்ஆய்வாளர் பால்பாண்டி, சம்பவ இடத்துக்கு வந்து நடத்துநர் சாமிநாதன், கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.