Show all

சிகிச்சை திராவிடத்தின் திட்டமிட்ட கண்ணி வெடிகளா! இந்த எச்.இராஜா, எஸ்.வி.சேகர் செயல்பாடுகள்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மை காலமாக எஸ்.வி.சேகரும், எச்.இராஜாவும் தமிழகத்தில் தமிழ் பண்பாட்டிற்கு இழிவு தேடும் வகையாக அருவருப்பான பதிவுகளையும், கருத்துகளையும் வெளிப் படுத்தி அடிக்கிற கொட்டத்திற்கு எல்லையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குடிகாரர்கள் போலவோ, மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் போலவோ, நாகரீகமில்லாமல் நடந்து கொள்கிறார்கள். எந்த அடிப்படையில் இவர்கள் இந்த அடாவடிகளுக்கு உரிமை எடுத்துக் கொள்கிறார்கள் என்று யாருக்கும் புரியவேயில்லை. 

எச்.இராஜா கனிமொழி குறித்தும், எஸ.வி.சேகர் பெண் நிருபர்கள் குறித்தும் பதிவிட்ட கருத்துகள் அருவருப்பின் உச்சம். 

இதழியலாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளைப் பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் முன்பு செய்தியாளர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, பன்வாரிலால் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் நோக்கில்,  நடிகர் எஸ்.வி.சேகர் தனது கீச்சு பக்கத்தில் பெண் செய்தியாளர்களைப் பற்றி கேவலமான ஒரு பதிவை வெளியிட்டார். இந்தப் பதிவு மிக நீண்ட நேரம் கீச்சுவில் தீயாகப் பரவிக் கொண்டிருந்தது. இதற்கு கடும் கண்டனம் எழுந்த காரணத்தால் அதனை நீக்கியிருக்கிறார். 

இதழியலாளர்களைத் தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் எச். ராஜாவுக்கு எதிராக இதழியலாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்தும் வருகின்றனர். இதனிடையே இதழியலாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளைப் பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்தி இன்று தி.நகரில் உள்ள பாஜக தமிழ்நாடு தலைமையகம் கமலாலயம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். சாலைமறியலில் ஈடுபட்டால் கைது செய்யவும் தயார் நிலையில் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள், பெண் செய்தியாளர்கள், செய்திவாசிப்பாளர்களை வெளிப்படையாக இழிவுபடுத்தி எழுதிய எஸ்.வி. சேகர், எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எஸ்.வி. சேகர், எச். ராஜாவிற்கு எதிராக முழக்கமிட்ட செய்தியாளர்கள், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினர். 

தெரியாமல் போட்ட பதிவு என்று எஸ்.வி. சேகர் கூறியதை ஏற்க முடியாது. எச். ராஜா போல எஸ்.வி. சேகரும் கதை விட வேண்டாம் என்று கூறினர். எஸ்.வி சேகரின் உருவப்படத்தை கிழித்து போட்டு தீயிட்டனர். பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் முன்பாகவே அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். பாஜக தலைமை உடனடியாக எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

எதையும் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டு விடலாம் என்று நினைக்கின்றனர். இனிமேல் இதுபோல பேசவே கூடாது அதற்காகவே இந்த போராட்டம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள் கூறினர். 

எஸ் வி சேகரைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தலைவர் சுபாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை : பத்திரிகையாளர்களைப் பற்றிய எஸ்.வி.சேகர் அவர்களின் பதிவு அவருடைய தரத்தையும் மதிப்பையும் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களின் மனதையும் பாதித்துள்ளது. குறிப்பாக அவருடைய பதிவில் பத்திரிகைப் பணியில் இருக்கும் பெண்களைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். மானமுள்ள பத்திரிகையாளர்கள் இனி எஸ்.வி.சேகரின் ஒட்டு மொத்த செய்திகளையும் புறக்கணித்து பத்திரிகையாளர்களின் தன்மானத்தை காக்க வேண்டும். 

பெண் பத்திரிகையாளர்களை தரம் கெட்டு விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவரது கருத்து பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, பணிக்கு செல்லும் அத்தனை பெண்களையும் இழிவு படுத்துவது போல் ஆகும். இந்தச் செயலை தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் வன்மையாக கண்டிப்பதுடன், பெண்களை இழிவுபடுத்திய எஸ்வி சேகர் மீது பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

சிகிச்சை திராவிடத்தின் திட்டமிட்ட கண்ணி வெடிகளா! இந்த எச்.இராஜா, எஸ்.வி.சேகர் செயல்பாடுகள் என்று, குழம்பிக் கிடக்கிறது ஒட்டு மொத்த தமிழகமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,763. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.