Show all

நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்கும் வரை ஊழல்கள்; ரகசியப்படம் கிடையாது: மோடி.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநிலச் சட்டசபைக்கு நேற்று முதல் கட்டமாக 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேற்று பீகார் மாநிலத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

ஜெகனாபாத், பாபுவா ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்தநாளையொட்டி, ஒரு மோசமான சம்பவம் (மந்திரி லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளியானது) நடந்து இருக்கிறது.

ஜெயப்பிரகாஷ் நாராயணின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பதாக கூறிக்கொள்பவர்களின் ஆட்சியில் தான் இது நடந்து உள்ளது. ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு இதுபோன்ற ஒரு அவமதிப்பு இதற்குமுன் நடந்தது கிடையாது.

நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்கும் வரை இதுபோன்ற ஊழல்கள் நடந்ததோ; அதை யாரும் ரகசியமாக படம் எடுத்து வெளியிட்டதோ கிடையாது.

ஆனால் அவர் அந்த பெரிய மனிதருடன் (லாலு பிரசாத் யாதவ்) கூட்டணி வைத்தபிறகுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

அந்தப் பெரிய மனிதருடன் கூட்டணி வைத்தபிறகு நிதிஷ்குமாரின் குணாதிசயமே மாறிவிட்டது. நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. குற்றங்களும் அதிகரித்து விட்டன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகித்த அவதேஷ் பிரசாத் குஷ்வாகா ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சி நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.