Show all

தொடர்வண்டி நிலையத்தில் வைத்து காதலியை வெட்டிய காதலர்! அன்று சுவாதி- இராம்குமார்; இன்று தேன்மொழி- சுரேந்தர்

‘கல்லூரிக்குச் செல்லும்போது பேருந்தில் சுரேந்தர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் காதலித்தோம். ஆனால் எங்கள் காதலுக்கு சாதி குறுக்கே வந்ததால் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. என் நிலைமையை சுரேந்தரிடம் சொல்லி புரியவைப்பதற்குள் என்னை அவன் அரிவாளால் வெட்டிவிட்டான்’ இது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ள தேன்மொழியின் வாக்குமூலம்.

32,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரோடு மாவட்டம், கலியங்காட்டுவலசு கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவரின் மகள் தேன்மொழி அகவை26. இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்துவருகிறார். இவர் சேத்துப்பட்டு தொடர்வண்டி நிலையத்தில் விடுதிக்குச் செல்ல காத்திருந்தபோது அரிவாளால் வெட்டப்பட்டார். தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

தேன்மொழி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் கல்லூரிக்குப் பேருந்தில் செல்லும் போது சுரேந்தரைச் சந்தித்தேன். அவர் வேறு ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். பேருந்தில் எனக்கு அறிமுகமான சுரேந்தர் என்னைக் காதலிப்பதாகக் கூறினார். நானும் அவரைக் காதலித்தேன். 

கல்லூரி படிப்பு முடிந்ததும் அரசு தேர்வு எழுதினேன். அவர், காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எனக்கு சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் அரசு வேலை கிடைத்தது. இதனால் ஈரோட்டிலிருந்து சென்னை வந்தேன். இந்தச்சமயத்தில் என்னை திருமணம் செய்வதற்காக பெண் கேட்டு என் வீட்டுக்கு வந்தார் சுரேந்தர். என்னுடைய பெற்றோரிடம் அவர் பேசினார். 

எங்கள் காதலுக்கு சாதி தடையாக இருந்தது. என் பெற்றோர், என்னை சுரேந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு என்னை சுரேந்தருடன் பேசக் கூடாது எனப் பெற்றோர் சத்தியம் வாங்கினர். இதனால் சுரேந்தருடன் பேசுவதை தவிர்த்தேன். இருப்பினும் சுரேந்தர் என்னுடன் பேச பலதடவை முயற்சி செய்தார். 

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஈரோட்டிலிருந்து சுரேந்தர் என்னை பேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், உன்னை நான் சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நான், வேண்டாம் என்று கூறினேன். இருப்பினும் நாளை சென்னையில் இருப்பேன் என்று சுரேந்தர் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். வழக்கம் போல வேலை முடிந்து நான் விடுதிக்குச் செல்ல சேத்துப்பட்டு தொடர்வண்டி நிலையத்துக்கு வந்தேன். என்னைப் பின்தொடர்ந்து சுரேந்தர் அங்கு வந்தார். நிலைய நடைபாதையில் நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். 

அப்போது என் நிலைமையை அவரிடம் கூறினேன். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் எனச் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார் சுரேந்தர். அப்போது நான், என் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடியாது என்று கூறினேன். இந்தச்சமயத்தில்தான் அரிவாளை எடுத்த சுரேந்தர், எனக்கு கிடைக்காத நீ, உயிரோடு இருக்கக் கூடாது என்று ஆவேசமாகக் கூறியபடி வெட்டினார். நான் சுதாரிப்பதற்குள் அரிவாள் வெட்டு விழுந்தது. என்னுடைய இடது புற தாடையில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது. அடுத்து அவர், அரிவாளால் வெட்டியபோது அதைக் கையால் தடுத்தேன். இதனால் கையிலும் வெட்டு விழுந்தது. சுரேந்தர் இப்படி செய்வாருன்னு என் கனவில்கூட நினைக்கவில்லை. என் சத்தம் கேட்டு சிலர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் நான் கீழே சரிந்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியாது" என்று கூறியுள்ளார். 

இதையடுத்து அவ்வழியாக வந்த மின்சார தொடர்வண்டியில் சுரேந்தர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயடைந்த சுரேந்தர் சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடமும் காவல்துறையினர் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது அவர், தேன்மொழியை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளார். 

சுரேந்தர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோட்டில் உள்ள சுரேந்தர் மற்றும் தேன்மொழியின் பெற்றோருக்கு எழும்பூர் தொடர்வண்டித்துறை காவலர்கள் நேற்றிரவு பேசியில் தகவல் தெரிவித்தனர். 

மூன்றாண்டுகளுக்கு முன்பு நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் பொறிஞர் சுவாதி, ராம்குமார் என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டதான தகவல் நமக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது. சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

காதலையும் வீரத்தையும் இரண்டு கண்களாக மதித்தவர்கள் நமது பழந்தமிழர்கள். அக இலக்கியங்கள் அனைத்தும் காதலைப் பேசும்; புற இலக்கியங்கள் அனைத்தும் வீரத்தைப் பேசும். சாதிக்காக ஒரு இலக்கியமும் படைக்கப் படவில்லை. தொழில் பிரிவுதான் சாதியாக இருந்தது. தொழில் மாறினால் சாதி மாறும். 

ஆனால் பார்ப்பனியர் கலப்பிற்கு பிறகு, உடலுழைப்பு சார்ந்த தொழில்கள் தாழ்ந்த தொழில்களாக கற்பிக்கப் பட்டன. இதனால் தொழில் மாறுவது படிப்படியாக தடுக்கப் பட்டது. பின்னர் தொழில் அடிப்படையான சாதி, பிறப்பு அடிப்படையான ஜாதியாக மாற்றம் அடைந்தது. 

வெள்ளையர்கள் வரவுக்கு பிறகு, தமிழர் அடிப்படைகள் போற்றப் பட்டன. தமிழ் அடிப்படை போற்றும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆளமுடியும் என்ற நிலைப்பாடு தமிழகத்தின் விதியாகி இருக்கிறது.  தமிழர் தொன்மங்கள் மதிக்கப் பட்டன. தமிழ் உயர்தனிச் செம்மொழி என்று நிறுவப்பட்டது. படிப்படியாக சாதிய ஏற்றதாழ்வுகள் வீழ்த்தப் பட்டு வருகின்றன. திரைப்படக் காதல் வாழ்க்கையிலும் பெரும்பான்மையாக வெற்றி அடைந்து வருகின்றன. நிறைய காதல் திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப் பட்டு வருகின்றன.

ஆனாலும் இன்னும்கூட, சாதியைக் காரணம் காட்டி காதல் மறுக்கப் படுவதற்கு, ஏதோ காரணங்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன என்று தெரிகிறது. தமிழ்ச் சான்றோர்கள் அவைகளை களைய முனைந்தால் மட்டுமே இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நாம் முழுமையாக விடை கொடுக்க முடியும்.

   -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,184.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.