Show all

ம.தி.மு. கழகத்தின் சார்பில், மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டப் பேரணி. வைகோ அறிவிப்பு

1948 பிப்ரவரி 4 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு, வதைக்கப்பட்டனர். 10 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாடற்ற அநாதைகள் ஆக்கப்பட்டனர்.

தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதால், நூலகம் தீயிடப்பட்டதால், கல்வி வேலை வாய்ப்பில் சமத்துவமின்றி இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டதால், காவல்துறை இராணுவத்தின் வன்முறைத் தாக்குதலில் தமிழர்கள் கொல்லப்பட்டதால், தமிழ்ப் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால், 1957 லிலும், 1965 லும் சிங்கள அரசுடன் தந்தை செல்வா போட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதால், 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்களால் சுதந்திர சமதர்ம இறையாண்மையுள்ள தமிழ் ஈழ பிரகடனம் செய்யப்பட்ட பின்னரும், 1983, 1995 இல் தமிழ் இனப் படுகொலைகளைச் சிங்கள இனவாத அரசு இராணுவத்தை ஏவி நடத்தியது.

2000 டிசம்பரில் தலைவர் பிரபாகரன் அவர்களின் விடுதலைப் புலிகள் படை உலகமே திகைக்கும் விதத்தில் யானையிறவு யுத்தத்தில் வெற்றி பெற்ற பின், புலிகள் தாங்களாகவே போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்தனர். வேறு வழியின்றி சிங்கள அரசு தானும் போர் நிறுத்தம் அறிவித்தது. 2006 ஆம் ஆண்டிலிருந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிங்கள அரசே முறித்து, இந்தியா உள்ளிட்ட ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவியைப் பெற்று இராணுவத்தின் முப்படைகளையும் ஏவி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது. மருத்துவமனைகள் உள்ளிட்ட இலட்சக் கணக்கான தமிழர்கள் குவிந்திருந்த பகுதியில் உலகம் தடை செய்த நாசகார ரசாயன குண்டுகளைச் சிங்களப் போர் விமானங்கள் தமிழ் மக்கள் மீது வீசிக் கொன்றது. உச்ச கட்டமாக 2009 ஜனவரியில் இருந்து கோரமான தாக்குதல்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஒரு இலட்சத்து 57 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

நடந்தது அப்பட்டமான தமிழ் இனப்படுகொலையாகும்.

2010 ஆம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த மார்சுகி தாரீமென் தலைமையிலான மூவர் குழு தமிழ் இனப் படுகொலைக்கான ஆதாரங்களை அறிக்கையாக தந்தது.ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் 2009 இல் இலங்கைக்கு பாராட்டுத் தீர்மானம்; 2010, 2011, 2012 வரையில் ஈழத்தமிழர்களின் நீதிக்கு அங்கு வழியில்லை.

தமிழக மாணவர்களும், உலகத் தமிழர்களும் கொடுத்த அழுத்தத்தால் 2013  இல் ஒரு நீர்த்துப்போன தீர்மானம். பின்னர் 2014 இல் முன்னேற்ற நகர்வாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க மார்ட்டி அட்டிசாரி தலைமையில் மனித உரிமை ஆணையம் நியமித்த மூவர் குழு செப்டம்பர் 16 இல் மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்த அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க பன்னாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய சர்வதேச விசாரணை மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீர, பன்னாட்டு விசாரணையை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்காது என்றும், உள்நாட்டு விசாரணை ஜனவரியில் தொடங்கும் என்றும் மண்டைக் கொழுப்போடும், திமிரோடும் சொல்லியுள்ளான்.

ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில், இலங்கை குறித்து மனித உரிமை ஆணையம் தந்த அறிக்கை மீது செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று விவாதத்துடன் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதில் ஈழத் தமிழர்களுக்கு பச்சை துரோகம் செய்து, சிங்கள அரசை பாதுகாக்க அமெரிக்க ஏகாதிபத்திய அரசு முனையலாம் எனத் தெரிகிறது.

இத்தகைய தமிழர் துரோகக் கழுத்தறுப்பு வேலைகளுக்கு மனித உரிமைக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் துணைபோகக் கூடாது என்றும், பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, நெஞ்சில் எரிமலையாகக் கொதிக்கின்ற உணர்வுகளின் வெளிப்பாடாக செப்டம்பர் 21 ஆம் தேதி பகலில் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலுக்கு முன்பாக வீரத் தியாகி முருகதாசன் திடலில் இலட்சக்கணக்கான புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் பேரணியாகத் திரண்டு விண்முட்டும் முழக்கம் எழுப்ப உள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தவும், குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தைச் செய்யாமல் பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை மனித உரிமைக் கவுன்சிலில் முன் வைக்க வலியுறுத்தவும்,

அதே செப்டம்பர் 21 இல் தாய்த் தமிழகத்தில் காலை 11 மணி அளவில்  தலைநகர் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படும்.

நான் நெல்லையிலும், அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கோவையிலும், நாசரேத் துரை தூத்துக்குடியிலும், மல்லை சத்யா சென்னையிலும், துரை.பாலகிருஷ்ணன் திருச்சியிலும், கணேசமூர்த்தி ஈரோட்டிலும், செந்திலதிபன் மதுரையிலும், புலவர் செவந்தியப்பன் சிவகங்கையிலும் பங்கேற்பார்கள். பல்லாயிரக்கணக்கில் கழகக் கண்மணிகள் கொடிகளுடன் திரண்டு, முத்துக்குமார் மேனியைப் பற்றி எரித்த நெருப்பின் மீது ஆணையிட்டு, ஈழத் தமிழர்களைக் காக்கும் ஆவேசக் குரலாக முழக்கமிட வாரீர் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.