Show all

பாகிஸ்தான் அரசுக்கு தீவிரவாதம் மட்டுமே வெளியுறவு கொள்கை: சையது அக்பருதீன்

பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை மட்டுமே தனது வெளியுறவு கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது, தீவிரவாதிகளின் புகழைப் போற்றிப் பாடுகிறது என்று ஐ.நா. அவையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

 

ஐ.நா. அவையில் மனித உரிமைகள் தொடர்பான விவாதம் புதனன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் தூதர் மலிகா லோதி காஷ்மீர் கலவரத்தை குறிப்பிட்டு பேசினார்.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தூதர் சையது அக்பருதீன் கடும் கண்டனம் தெரிவித்தார். விவாதத்தில் அவர் பேசியதாவது:

     பாகிஸ்தான் அரசு தீவிரவாதத்தை மட்டுமே தனது வெளியுறவு கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது. தீவிரவாதிகளின் புகழைப் போற்றிப்பாடுகிறது. ஐ.நா. அவையில் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்ட பலருக்கு பாகிஸ்தான் தனது மண்ணில் புகலிடம் அளித்துள்ளது. அண்டை நாடுகளின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க அந்த நாடு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 

ஐ.நா. அவையில் மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினராக பாகிஸ்தான் விண்ணப்பித்தது. ஆனால் அதன் கடந்தகால, நிகழ்கால மனித உரிமை மீறல்களால் அந்த நாட்டுக்கு உறுப்பினர் அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது.

 

காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி ஐ.நா. அவையை  தவறான பாதையில் வழிநடத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. ஆனால் அந்த நாட்டின் முயற்சி பலிக்காது

என்று அவர் பேசினார்.

 

பாகிஸ்தான் தூதர் மலிகா லோதி பேசியது:

     காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அந்த மக்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஆனால் இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை இந்திய ராணுவம் அப்பட்டமாக மீறி வருகிறது. அப்பாவிகளின் உயிரைப் பறித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அங்கு ஐ.நா. அவை மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்

என்று அவர் தெரிவித்தார்.

 

புர்ஹான் வானியை புகழ்ந்த ஷெரீபுக்கு பதிலடி

 

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் முகமது வானி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டித்துள்ளார். சமூக வலைத்தளம் மூலம் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தீவிரவாதத் பாதைக்கு இழுத்த புர்ஹானை காஷ்மீரின் தன்னிகரற்ற தலைவர் என்று நவாஸ் வர்ணித்துள்ளார்.

 

இந்தியத் தூதர் சையது அக்பருதீன் இதையே மறைமுகமாகக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளின் புகழ்பாடுகிறது என்று குற்றம்சாட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.