Show all

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தொழில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தொழில்கள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி- பதில் வடிவ அறிக்கையில்,

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொள்கிற மாநாடு 2013-க்கு பிறகு நடத்தப்படவேயில்லை. நடுவண் அரசுக்கு கடிதம் எழுதுவதோடு வேலை முடிந்ததாக முதல்வர் நினைக்கிறார். 100 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் வந்ததாக அரசு கூறியது. ஆனால், அது நடந்து முடிந்து 3 மாதங்கள் முடிந்த நிலையிலும் தொழில்கள் தொடங்கப்படவில்லை. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைந்து விட்டது என்கின்றனர்.

திமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் கடன் சுமை 1 லட்சம் கோடி என்று கூறிய முதல்வர், ஒவ்வொருவர் தலையிலும் ரூ.15 ஆயிரம் கடனை இறக்கி வைத்ததாக கூறினார். ஆனால், தற்போதோ அரசின் கடன் ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது.

கரும்பு விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளது நியாயமானது தான். ஆனால், நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்க கடந்த 3 ஆண்டுகளில் நடுவண் அரசு அளித்த ரூ.1,500 கோடி செலவு செய்யப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலின் போது சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், சென்னையில் ஏற்பட்ட வௌ;ளம் பதிப்பகங்களையும் பாதிப்படைய வைத்துள்ளது. இதனால், ரூ.25 கோடி இழப்பு இருக்குமென்று பதிப்பகத்தார் கூறுகின்றனர். வௌ;ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அரசு முன் வந்ததாக தெரியவில்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.