Show all

முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக எழுந்துள்ள புகாரின் அடிப்பையில், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் அமிதாப் தாக்குர் புகார் மனு அளித்திருந்தார். அதில், முலாயம் சிங் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும், இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தாக்குர் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், முலாயம் சிங் யாதவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்து, அவரது புகார் மனுவை ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் நிராகரித்து விட்டார். இதுகுறித்து அமிதாப் தாக்குர் கூறுகையில், தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுக்கவுள்ளேன் என்றார்.

முன்னதாக, முலாயம் சிங் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, அதற்கான ஆதாரமாக தொலைபேசி உரையாடலை அமிதாப் தாக்குர் வெளியிட்டார். இதனால், உத்தரப் பிரதேச அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்குர் மனு அளித்தார். இதையடுத்து, உத்தரப் பிரதேச அரசு தாக்குரை கடந்த 13ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்தது.

அவருக்கு மாநில அரசு 200 பக்க குற்றப்பத்திரிகை அளித்துள்ளது.

இந் நிலையில், லக்னௌ தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நாடினார் அமிதாப் தாக்கு. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 156(3)ன் கீழ் அவரது மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு சாம் பிரபா.

தாக்குர் அளித்துள்ள தகவல்களைப் பார்க்கிற போது, இந்த புகார், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506-ன் (அச்சுறுத்தல்) கீழ் வழக்கு பதிவு செய்ய ஏற்றதாக தோன்றுகிறது. எனவே இது குறித்து மாஜிஸ்திரேட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அது தொடர்பாக நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

முலாயம் சிங் மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.