Show all

பெரியாருக்கு எதிராக! அன்றைக்கு துக்ளக் சிற்றிதழால் என்ன முடியவில்லையோ அது, இன்றைக்கு இரஜினி காந்தாலும் முடியாது.

துக்ளக் சிற்றிதழின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்- பெரியார் அவர்கள் அன்றைக்கு இராமனையும் சீதாவையும் அவமதித்ததாக பேசியிருக்கிறார். பெரியார் இயக்கங்கள், இராமனையும் சீதாவையும் பெரியார் அவமதிக்கவில்லை என்று போராட்டங்களை முன்னெடுத்து தங்களுக்கு இருக்கிற பாஜகவின் மீதான அச்சத்தை- பெரியார் அவர்களின் மீது ஏற்றி பெரியாரைக்  களங்கப்படுத்துகிறார்கள். 

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: துக்ளக் சிற்றிதழின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழ்த்தொடராண்டு-5073 ல் (ஆங்கிலம்-1971) சேலத்தில் பெரியார் அவர்கள், இராமன், சீதை போன்று வேடமணிந்தவர்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தித் சென்றதாகவும், அதை பேரிதழ்கள் செய்தியாகப் போடாத நிலையில், சோ தன் துக்ளக் சிற்றிதழின் அட்டையில் போட்டு விமர்சித்திருந்ததாகவும், இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்ததாகவும், இதனால் துக்ளக் பிரதிகளை திமுக அரசு கைப்பற்றியதாகவும், அந்த இதழை, மீண்டும் சோ அச்சடித்து கள்ளத்தனமாக (பிளாக்கில்) விற்றதாகவும் தெரிவித்து- இப்படிக் கலைஞர் அவர்களை மிகப் பிரபலமாக்கினார் துக்ளக் ஆசிரியர் சோ என்று  இரஜினிகாந்த்  பேசியிருக்கிறார். 

அதெல்லாம் திமுகவிற்கும், பெரியாருக்கும் பெருங்கூட்டமாக தமிழக மக்கள் அங்கீகாரம் அளித்த காலம். அந்த காலத்தில்தான் சோவின், துக்ளக் இதழ் பதிவு பெற்ற சிற்றிதழாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் சோவின், பெரியாரின் இறைமறுப்பு மற்றும் திமுகவின் தமிழினஆதரவுகளின் மீதான எதிர்ப்பை மலைத்து சில தமிழ்ப்பார்ப்பனியர்கள் சோ வை அறிவாளியாகக் கொண்டாடுவார்கள் என்பது உண்மையே. 

இன்றைக்கும் தமிழ்பெருங்கூட்டம், அதுவும் மாநிலம் கடந்தும் கோயிலில் குவியும் தமிழ்க்கூட்டம், நோட்டாவிற்கு கீழாகத்தான் மதிக்கிறது  புளுகுனி ஹிந்துவாவை முன்னெடுக்கும் பாஜகவை. தமிழர்- தங்கள் மெய்யியல்- சித்தாந்தம் என்பதையும், பாஜக கட்டமைக்க நினைக்கும் ஹிந்துத்துவா- புளுகுனி வேதாந்தம் என்பதையும் நன்கு அறிவார்கள். ஆனால் அன்றைய துக்ளக் சோவும் இன்றைய இரஜினிகாந்தும், தமிழக பாஜகவினரில் ஒற்றை நபரும் அறிய மாட்டார்களா? அல்லது அறியாதவர்கள் போல நடிக்கின்றார்களா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

பெரியார்காலத்தில் இன்றைய இரஜினி, அன்றைய சோவையெல்லாம் அவருக்கேயுரிய ஒற்றைச்சொல்லில் வீழ்த்தி விடுவார் பெரியார். இன்றைக்கு பெரியார் அமைப்புகள் இரஜினிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று கிளம்பியிருப்பது பாவமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. 
பெரியார் அவர்கள்- இராமனையும் சீதாவையும் அவமதிக்கவில்லை என்று பெரியார் இயக்கங்கள் வாதாடுவது எந்த வகையில் சரியாக இருக்க முடியும். நீங்கள் பாஜகவிற்கு பயந்துகொண்டு, இராமனையும் சீதாவையும் அவமதிக்கவில்லை பேசுங்கள். பெரியாரின் கொள்கைகள், நடவடிக்கைகள், போரட்டங்கள், சாதனைகள், வெற்றிகள் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அதை எதிரி ‘தவறு போலத்தான்’ திரிப்பான்; அவனின் திரிப்புக்கு நீங்கள் பெரியாரைப் பலியாக்காதீர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.