Show all

மனுதர்ம வழி குலக்கல்வி- பயிற்சி மையங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள்- முன்னெடுப்புகளுக்கான முயற்சியே நீட் தேர்வு: கி.வீரமணி

மனு தர்மத்தின் வழியில் குலக் கல்வியைக் கொண்டுவரும் முயற்சியும் பயிற்சி மையங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்க முயற்சியும்தான் நீட் தேர்வு என்று தெரிவித்தார் கி.வீரமணி.

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. நடப்பு தமிழக அரசுக்கு- செயலலிதா அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதி இல்லை என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார், 

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, கல்வித்துறையில் ஊழலைத் தடுக்க நீட் தேர்வு கொண்டுவந்தோம் என்று சொல்வது மிகப்பெரிய பொய். மனு தர்மத்தின் வழியில் குலக் கல்வியைக் கொண்டுவரும் முயற்சியும் பயிற்சி மையங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதிக்க முயற்சியும்தான் நீட் தேர்வு என்று தெரிவித்தார் கி.வீரமணி.

மேலும், தமிழ்மன்னன் இராசராச சோழன் கட்டிய கோயிலில் சம்ஸ்கிருதத்தில் குடமுழக்கு நடத்தவுள்ள நிலையில் தமிழில் நடத்த போராடி வருகிறோம். தமிழர்களுக்குக் கல்வி அறிவு கொடுக்கக் கூடாது சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். வர்ணாஸ்ரமத்தின்படி ஆட்சியமைக்கும் நிலையைத் தற்போது உருவாக்க முயல்கிறார்கள். இதை தொடக்கத்திலேயே துடைத்து எறிவோம்.

பெரியார் பெற்றுத் தந்த உரிமை எனும் முதுகெலும்பை உடைத்துவிட்டு நிற்கிறது தற்போதைய தமிழக அரசு. பாஜக பார்த்தாலே கீழே விழும் ராஜவிசுவாசியாக உள்ளது. இதை ஜெயலலிதா அரசு என்று சொல்லிக்கொள்ள தமிழக அரசுக்குத் தகுதி இல்லை. ஜெயலலிதா 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதற்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினோம்.

நடுவண் அரசின் மக்கள் விரோதத் திட்டங்களைத் தமிழக அரசு உடனடியாக ஏற்றுக்கொள்கிறது. பல்கலைக்கழகங்களில் மாநில உரிமைகள் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. மருத்துவராக நினைத்த கூலித் தொழிலாளியின் மகளான அனிதா உட்பட 8 பேரின் உயிர்களைப் பறித்துள்ளது நீட் தேர்வு. ஜெயலலிதா இருக்கும்போது நீட்தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை.

அது போன்று தமிழக அரசால் இப்போது செய்ய முடியவில்லை. நீட் தேர்விலும் ஊழல், ஆள்மாறாட்டம் நடந்து வருகிறது. அதனால் நீட் தேர்வே தேவையில்லை என்று பேசினார் கி.வீரமணி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.