Show all

தமிழக காவல்துறை தலைவருக்கு தேசிய மகளிர் ஆணையம் கவன அறிக்கை! பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; சிக்கும் அயோக்கியன்-நாகராஜ்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை மயக்கி அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த கும்பல் காவல் துறையிடம் சிக்கியுள்ளது. மிகப்பெரிய வலைப்பின்னல் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கருதப்படுவதாலும், இதில் அரசியல் பிரபலங்களின் தலையீடு இருக்கலாம் என்றும் கருதப்படுவதாலும் இந்த வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பப்படுகிறது. 

இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மட்டும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறைதலைவர் ராஜேந்திரனுக்கு கவனஅறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்:

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் 'குண்டர்கள்' என்ற செய்தியை தேசிய மகளிர் ஆணையம் கவனித்தது. இச்செய்தி பல்வேறு ஊடகங்களின் வாயிலாக எங்களுக்குத் தெரியவந்தது. பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என பலரும் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு அந்த காட்சிகள் காணொளிகளாகவும் எடுக்கப்பட்டு பின்னர் அவர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்ததாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தருணத்தில், தமிழக பெண்களின் பாதுகாப்பு மீது தேசிய மகளிர் ஆணையம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. 

இந்த சம்பவத்தின் தாக்கத்தை உணர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரின் மீதும் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். 

அதேபோல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கி அறிக்கை ஒன்றை தேசிய மகளிர் ஆணையத்துக்கு சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மை செய்தியாக: பொள்ளாச்சியில் பாலியல் புகார் அளித்த நபரை தாக்கியதாக கூறப்பட்ட குடிப்பக.நாகராஜ் இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சியில் இளம் பெண் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்காக தாக்கப்பட்டார். அவரைத் தாக்கிய புகாரில் குடிப்பக.நாகராஜ் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் குடிப்பக.நாகராஜ் கைது செய்யப்பட்ட ஒரே நாளில் பிணையில் வெளியே வந்தார். குடிப்பக.நாகராஜ் பொள்ளாச்சி அம்மா பேரவை செயலாளராக பொறுப்பு வகித்த நிலையில் அவர் அந்த பொறுப்பில் இருந்து இந்தக் குற்றச்சாட்டுக்குப் பிறகு எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதையாக நீக்கப்பட்டார். 

இந்நிலையில் பாலியல் புகார் குறித்து தற்போது வரை நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் நான்கு பேர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது குடிப்பக.நாகராஜ் இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வது போன்றும், அதனை மற்றொருவர் காணொளி பதிவு செய்வது போன்ற காட்சியும் தற்போது வெளியாகி உள்ளது. 

புகார் அளித்தவரை தாக்கியதாக மட்டுமே குடிப்பக.நாகராஜ் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த நிலையில் தற்போது அயோக்கியன் குடிப்பக.நாகராஜ் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி காவல்துறை புளுகு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

முன்னதாக இந்த வழக்கில் ஆளும் கட்சியினரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை அரசியல் தலைவர்கள் மறுத்தனர். ஆனால் தற்போது அயோக்கியன் குடிப்பக.நாகராஜ் கணொளி வெளியானதால் இந்த விவகாரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு நிச்சயம் தொடர்பு இருக்கும் என்று தாம் தொடக்கதில் இருந்தே சொல்லி வருகிறோமே என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் அயோக்கியன் குடிப்பக.நாகராஜ் உடனடியாக கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,090.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.