Show all

நளினி, 25ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளியே வந்தார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இன்று பரோலில் வெளியே வந்தார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி.

 

இவரது தந்தை சங்கர நாராயணன் நேற்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக (91 வயது) காலமானார். அவரின் உடல், சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.

 

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவதற்காக, தன்னை பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நளினி சிறைத்துறையிடம் மனு அளித்தார். இதையடுத்து, இன்று காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் நளினிக்கு பரோல் வழங்கியுள்ளது சிறைத்துறை.

 

இதை தொடர்ந்து இன்று காலை, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து, துப்பாக்கி ஏந்திய 7 போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்திற்கு நளினியை அழைத்து சென்றனர்.

 

25 ஆண்டுகளுக்குப் பின்னர் பரோலில் தனது சகோதரர் இல்லத்திற்கு வந்த நளினி, தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுடன் துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 

நளினிக்கு ஆறுதல் கூறவும், அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்தவும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் உள்ளிட்ட பல தலைவர்களும் வந்திருந்தனர்.

 

தந்தை சங்கர நாராயணன் இறுதிச் சடங்கு முடிந்ததும், இரவு வேலூர் சிறைக்கு புறப்பட்டு செல்வார்.  நளினி முதல் முறையாக பரோலில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நளினி,

 

     விடுதலையை தவிர வேறு எதை நாங்கள் எதிர்பார்க்க முடியும்?.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை வாழ்க்கை மிகவும் கொடுமையானது. நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டோம்.

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுவிப்பார் என்று நம்புகிறோம் என நளினி கூறியுள்ளார்.

27 வருடங்களாக சிறையில் இருக்கும் பெண் நானாகத்தான் இருப்பேன்.

25 ஆண்டுகளுக்கு பின்னர் பார்க்கும் சென்னை நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தலைக்கவசம் அணிந்து செல்வதை பார்க்கும் போது சற்று வியப்பாக இருந்தது என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.