Show all

சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்த் கூட்டணி கொண்டாட்டம்

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுடன் மக்கள் நலக் கூட்டணி தேர்தல் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 தேமுதிக 124 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 தேமுதிகவுடன்உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மக்கள் நலக்கூட்டணி இனி விஜயகாந்த் கூட்டணி என்று அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பான தேர்தல் உடன்பாடு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (மார்ச் 23) கையெழுத்தானது.

 வருகிற மே மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ள தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி இணைந்து சந்திப்பது தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

 மக்கள் நலக் கூட்டணியைச் சேர்ந்த வைகோ (மதிமுக), ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்)இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்தத் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அளித்த பேட்டி:

     நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடுவதென உடன்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி இரண்டுக்கும் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என விஜயகாந்த் அறிவித்திருக்கிறார்.

 அதோடு, இந்தக் கூட்டணி வெற்றிபெற்று விஜயகாந்த் தலைமையில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தேமுதிக அறிவித்திருக்கிறது. அதே கருத்தை மக்கள் நலக் கூட்டணியும் அறிவிக்கிறது. எனவே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

 தேமுதிக-வுடனான கூட்டணியால் மக்கள் நலக் கூட்டணியின் நம்பிக்கை நிறைவேறி இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிக-வும் இணைந்த பிறகு என்ன பெயர் சொல்லி அழைப்பீர்கள் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். மக்கள் நலக் கூட்டணி இனி ‘விஜயகாந்த் அணி’ என அழைக்கப்படும். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் அமையும். விஜயகாந்த் ‘கிங்-ஆகவும், நாங்கள் நால்வரும் கிங் மேக்கராகவும்’ இருப்போம் என்றார்.

 

தொல். திருமாவளவன்:

விஜயகாந்த் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த முடிவை எடுத்ததன் மூலம் அவருக்கு எதிராக கடந்த 3 மாதங்களாகப் பரப்பப்பட்ட விமர்சனங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறார். மக்கள் பக்கம்தான் விஜயகாந்த் நிற்பார் என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் நலக் கூட்டணியுடன் இன்று தொகுதி உடன்பாடு வைத்திருக்கிறார்.

 ஏற்கெனவே, ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக-வை தூக்கி எறிவதற்காக எதையும் செய்வேன் எனக் கூறியிருந்தார். வரும் தேர்தலில் அதிமுக-வுக்கும் இந்த அணிக்கும்தான் நேரடிப் போட்டி.

ஜி.ராமகிருஷ்ணன்:

தமிழகத்தில் கடந்த 45 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் மக்கள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்ற ஏக்கம் மக்களிடையே இருந்து வந்தது. அதை நிவர்த்தி செய்வதற்காகவே மக்கள் நலக் கூட்டணி உருவானது. இப்போது ஐந்திர ஆற்றல்காளாய்  தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இணைந்திருக்கிறோம். நிச்சயம் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவோம்.

இரா.முத்தரசன்:

திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்வதை மாற்றும் வகையில் சபதம் எடுத்துக் கொள்கிற நாளாக இன்றைய நாள் விளங்கும்.

 திமுக, அதிமுக அல்லாத மாற்று ஆட்சியைத்தான் மக்களும் விரும்புகின்றனர்,

 கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தோற்றதுபோல, தேர்தலிலும் தோல்வியை திமுக சந்திக்கும்.

     மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 110 தொகுதிகளில், அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகளுக்கும் எத்தனைத் தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் எனவும், எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்தக் கட்சிகள் போட்டியிடுவது என்பது குறித்தும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

     தேமுதிக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

     இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில் கூறியதாவது:

தொடர்ந்து என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தன. விஜயகாந்த் ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என தொடர்ந்து விமர்சித்து வந்தனர். எந்தப் பக்கமும் போகவில்லை, பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என நான் தொடர்ந்து கூறிவந்தேன்.

 மக்களோடுதான் என் கூட்டணி என்று பலமுறை சொல்லிவந்துள்ளேன். அதனால்தான் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்திருக்கிறேன். கூட்டணியின் தலைவராக என்னை ஏற்றுக்கொண்டதுடன் முதல்வர் வேட்பாளராகவும் என்னை முன்னிறுத்தியுள்ளனர். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி இரண்டுக்கும் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றார் விஜயகாந்த்.

 

 

 

 

     தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை புதன்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. அப்போது, தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வெளியே 5 கட்சிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர்.

 பகல் 12 மணியளவில் சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 இதை அறிந்த தொண்டர்கள், தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வெளியே கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கோஷமிட்டபடி பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.