Show all

குழந்தையை மீட்டது தாய்மொழி! இது ஹிந்தித்தாய்மொழி குறித்தான செய்தி

மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மீட்கப்பட அந்தக் குழந்தையின் தாய்மொழியான ஹிந்தி பயன்பட்டுள்ளது.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மெரினாவில் கடத்தப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மீட்கப்பட அந்தக் குழந்தையின் தாய்மொழியான ஹிந்தி பயன்பட்டுள்ளது.

யாரும் பிழைப்பதற்கு ஏற்ற மண் தமிழகத்தின் தலைநகரம் சென்;னை என்று, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், படித்தவர்- படிக்காதவர், பணக்காரர்- பாமரர் என்று பாகுபாடு எதுவும் இல்லாமல், பிழைக்க வாய்ப்பு தேடுவோர் சென்னை நோக்கி பயணிக்கின்றனர். 

அண்மைக் காலமாக ஏராளமான வட இந்தியர்கள் பலரும், படித்தவர்- படிக்காதவர், பணக்காரர்- பாமரர் என்று பாகுபாடு எதுவும் இல்லாமல், பிழைக்க வாய்ப்பு தேடுவோர் சென்னை நோக்கி படையெடுக்கின்றனர்.
  
அந்த வகையான ஒரு வடஇந்தியக் குடும்பம்தான் சென்னை மெரினாவில் பலூன் விற்கும் ஜான்போஸ்லே, ரந்தீசா என்ற வடமாநில இணையர்கள். இவர்களிடமிருந்து, 7 மாத ஆண் குழந்தையை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் கடத்தினார். 

கண்காணிப்பு படக்கருவி மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலி ஜூலியட் என்பவரின் உதவியோடு, அந்தக் குழந்தையின் தாய்மொழியான ஹிந்தியும் அந்தக் குழந்தையை காவல்துறையினர் அந்தக் குழந்தையை மீட்கப் பெரிதாகப் பயன்பட்டுள்ளது. 

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை செவிலி ஜூலியட் கூறுகையில், மருத்துவமனையின் 5வது மாடிக்குச் செல்லும்போது, ஒரு குழந்தைக்கு பெண் ஒருவர் புட்டி பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்தக் குழந்தைக்கு சுமார் ஆறேழு மாதங்கள் இருக்கும். அதனால், எனக்கு அந்தப் பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

மேலும், அந்தக் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இந்த மருத்துவமனையில் குழந்தைக்கு தாய் பால்தான் கொடுப்பார்கள். அதுவும் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே, அந்தப் பெண்ணிடம் விசாரித்தேன். அப்போது அவர், எனக்கு சில மாதங்களுக்கு முன் இங்குதான் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை. சிகிச்சைக்காக வந்துள்ளேன் என்று கூறினார். அப்போது இரவு நேரம் என்பதால், அனுமதி பெற்றிராமல் மருத்துவமனையில் நீங்கள் இருக்கக் கூடாது என்று கூறினேன்.

பின்னர் அந்தப் பெண் குறித்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தேன். இதையடுத்து அந்தப் பெண் மறுநாள், பெண் குழந்தை என்று பதிவு செய்திருந்தார். ஆனால், பெயரை சாம் என்று கூறியிருந்தார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை காவல்துறையினர் எங்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர். அப்போது நான், முன்பு குழந்தையையும் அந்தப் பெண்ணையும் பார்த்த தகவலைத் தெரிவித்தேன். உடனே காவல்துறையினர் மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு படக்கருவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பெண்தான் குழந்தையைக் கடத்திக்கொண்டு வந்திருக்க முடியும் என்ற ஐயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போதுகூட அந்தப் பெண், இந்தக் குழந்தை என்னுடையது என்று அழுதார். ஆனால், அந்தக் குழந்தை மட்டும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. எங்கள் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி ஒருவர், ஹிந்தியில் பேசினார். உடனே அந்தக் குழந்தை தலையைத் தூக்கி சத்தம் வருவதைக் கவனித்தது. அதனால், அந்தக் குழந்தைக்கு தமிழ் தெரியாது, ஹிந்தியில் பேசினால் கவனிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டோம். 

இதற்கிடையில்  குழந்தையின் பெற்றோரை அங்கு வரவழைத்தனர். அவர்களைப் பார்த்ததும் அந்தப் பெண்ணிடமிருந்த குழந்தை, உண்மையான தாயிடம் சென்றது. இதையடுத்து அந்தப் பெண்ணை காவலர்கள், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் என்று தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.