Show all

மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 78 அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள்

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 78 அமைச்சர்களில் 72 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. அமைச்சர்களில் 24 பேர் மீது குற்ற வழக்குகளும் உள்ளன.

 

நடுவண் அமைச்சரவை கடந்த கிழமை விரிவாக்கப்பட்டது. அப்போது 19 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். இதன் மூலம் அமைச்சரவையின் பலம் 78 ஆக அதிகரித்தது.

 

புதிய அமைச்சர்களில் எம்.ஜே.அக்பர் அதிகபட்சமாக ரூ.44.90 கோடி சொத்து வைத்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக பி.பி.சௌத்ரி (ரூ.35.35 கோடி),

விஜய் கோயல் (ரூ.29.97 கோடி) சொத்து வைத்துள்ளனர். புதிய அமைச்சர்களில் 11 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

இவர்களும் கோடீஸ்வர அமைச்சர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 78 அமைச்சர்களில் 9 பேர், 30 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர்.

8 அமைச்சர்கள் மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக சொத்து வைத்துள்ளனர்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அதிகபட்சமாக ரூ.113 கோடி சொத்து வைத்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக உணவுப்பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் சிங் கௌர் பாதல் ரூ.108 கோடிக்கும், மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ரூ.108 கோடிக்கும் சொத்து வைத்துள்ளனர்.

 

புதிய அமைச்சர்களில் 7 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

அமைச்சர்களில் 3 பேர் மட்டுமே 31 முதல் 40 வயதுக்குள்பட்டவர்கள்.

44 பேர் 41 முதல் 60 வயதுக்குள்பட்டவர்களாகவும்,

31 பேர் 61 முதல் 80 வயதுக்குள்பட்டவர்களாகவும் உள்ளனர். 9 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.

78 அமைச்சர்களில் 14 பேர் பிளஸ் 2, அதற்கு குறைவான கல்வித் தகுதி பெற்றவர்கள்.

63 பேர் பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியை உடையவர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.